Our Feeds


Wednesday, March 30, 2022

ShortTalk

புலம்பெயர் அமைப்புகளை தடைசெய்துவிட்டு முதலிட அழைப்பதில் அர்த்தமில்லை. - த.தே.கூ காட்டம்



தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும் வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள். புலம்பெயர் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்துவிட்டு அவர்களை வருமாறு அரசு அழைப்பதில் அர்த்தமில்லை. எனவே, அவர்கள் வருவார்கள் என்று திடீரென பகல் கனவு காண வேண்டிய அவசியம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கருடன் சந்திப்பை நடத்தியிருந்தோம். அவர் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடனும் சந்திப்பை நடாத்தியிருகின்றார். தமிழ்த் தரப்பில் மலையகத் தரப்பு சார்பில் மனோகணேசன் தலைமையிலான குழுவையும முஸ்லீம் கட்சிகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்து கலந்துரையாடினார்.


எங்களுடன் நடாத்திய உரையாடலிலே மிக முக்கியமாக கடந்த 25ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடந்த பேச்சு சம்மந்தமாக பேசப்பட்டது. இது சம்மந்தமாக எங்களுக்கு முன்னர் ஜனாதிபதியைச் சந்தித்ததாகவும், நாங்கள் தெரிவித்த விடயத்தை ஜனாதிபதி எற்கனவே சொல்லியிருப்பதாகவும் உடனடி விடயங்கள் சம்மந்தமாக ஏற்பட்டிருக்கும் இணக்கப்பாடு அல்லது வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று இந்தியாவிற்கு உறுதியளித்ததாகவும் எங்களுக்குத் தெரியப்படுத்தினார்.


அந்த உடனடி விடயங்களில் நீண்டகால தமிழ் அரசியற் கைதிகளின் விடுவிப்பு சம்மந்தமாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நீதியமைச்சரும் நானும் இது சம்மந்தமாக ஒவ்வொருவர் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு எங்களின் சிபாரிசினைச் செய்வோம். அதுபோல் அண்மையல் கைது செய்து விசாரணை இல்லாமல் இருப்பவர்களை ஏற்கனவே விடுவிப்பதாகச் சொன்னார்கள் அந்த விடயத்தை மிகத் துரிதமாகச் செய்து அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படாவிட்டால் அவர்கள் தெடர்பில் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.


நில அபகரிப்பு தொடர்பில் நீண்ட பேச்சு நடத்தினோம். வெவ்வேறு சட்டங்களின் அடிப்படையில் எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவர்கள் இணங்கினார்கள். அதற்கப்பால் நிருவாக எல்லைகளை மாற்றுகின்ற முயற்சி நடைபெறுகின்றது. அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பை தாம் உடனடியாக வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார். இராணுவத் தேவைக்காகப் புதிய சுவீகரிப்புகள் செய்யப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது.


அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கென்று ஒரு விசேட அபவிருத்தி நிதியமொன்று உருவாக்குவதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. அது எவ்வாறு என்ற விடயங்கள் இன்னும் பேசப்படவில்லை. இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் பேசி முதலீட்டாளர்களை எவ்வாறு வருவிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடுவோம். இந்த நான்கு விடயங்கள் சம்மந்தமாக அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது. இத்துடன் மேலும் முக்கிய விடயங்கள் குறித்தும் பேசி முடிவெடுக்க வேண்டும்.


ஒவ்வொரு தலைப்புகளின் கீழும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றோம். அதிலே பல விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. சில உதாரணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. விரிவான பேச்சுக்கள் இனிவரும் காலங்களில் நடைபெறும்.


நிருவாக எல்லைகள் சம்மந்;தமாகவும் நாங்கள் பேசியிருக்கின்றோம். அதிலே கல்முனை வடக்கு சம்மந்தமான விடயம் உள்ளிட்டவையும் பேசப்பட்டன. அவை தொடர்பில் விவரமாகச் சொல்லப்படாவிட்;டாலும் இனிவரும் நாட்களில் அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் பேசும் போது அந்த விடயத்தைப் பற்றியும் பேசுவோம். மகாவவலி இடங்கள், மாவட்ட, பிரதேச செயலக எல்லைகள் மாற்றியமைக்கின்ற விடயங்கள் பற்றியும் இனிவரும் காலங்களில் பேசுவோம். ஆனால் அவையெல்;லாம் உடனடியாக நிறுத்தப்படும் என்கிற வாக்குறுதி எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.


இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவிக்கும் போது இது நல்ல விடயங்கள் உடனடி விடயங்களுக்கான தீர்வை விரைவாகப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சியை நாங்களும் எடுக்க வேண்டும் என்ற ஆலோசனை எங்களுக்கு வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் புதிய அரசிலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்தவுடன் அரசியற் தீர்வு விடயம் பற்றிப் பேசலாம் என்ற விடயம் சொல்லப்பட்டிருந்தது. அந்த அறிக்கை வந்து அதற்கு அவர்கள் பேசுவதற்குத் தயாராகின்ற போது நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் இறுக்கமாக இருந்து பேசுங்கள். அதற்கு முன்னதாக அவர்கள் இணங்கிய விடயங்களைச் செய்வதற்கு உங்கள் ஒத்துழைப்புகள் தேவையான இடங்களில் உங்கள் ஒத்துழைப்புகளை வழங்குங்கள் என்றும் சொல்லியிருக்கின்றார். ” – என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »