உணவுப் பஞ்சத்தில் இருந்து எமது நாட்டை அவசரமாக எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் என தேசிய காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது .ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை சொல்லும் அளவுக்கு நாட்டின் பொருளாதார நிலைமை மாறிவிட்டது. ஏனெனில் ரணிலின் ஆட்சியில்தானே எமக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டன. உணவுப் பஞ்சத்தில் இருந்து எமது நாட்டை அவசரமாக எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும். தற்போது அரசாங்கத்துடன் 11 கட்சிகளுடன் நாமும் ஒன்றாகவே உள்ளோம்.
எமது கட்சி ஒரு தனி கட்சி.எங்களது கட்சியின் முக்கிய நோக்கம் நாட்டுப்பற்றாகும். இந்த நோக்கம் தான் அரசாங்கத்துடன் எமது கட்சியை ஒத்துபோக வைக்கிறது.எனவே தான் எமது நாட்டுக்கு வெளிநாட்டு சக்திகளினால் தீங்கு ஏற்படக் கூடாது என்பதில் நாம் கவனமாக உள்ளோம்.
உலகம் இன்று 3 ஆவது போருக்காக தயாராகி வருகிறது. இதில் யார் சண்டியர் என்பதை தேடிக் கொண்டிருக்கின்றனர். எனவே தான் இவ்வாறான சண்டியர்களுக்கு ஆக்கிரமிக்கின்ற மற்றும் தேவைப்படும் இடமாக இலங்கை உள்ளது என்பதை நாம் அறிவோம்.கடந்த காலங்களில் எம்சிசி ஒப்பந்தம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க தற்போது ஆலோசனை கூற வருகின்றார்.
மேலும் சாய்ந்தமருது நகர சபை விடயமும் கால ஓட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.மேலும் சில முஸ்லி ம் பிரமுகர்களினால் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் முஸ்லிம் கூட்டமைப்பு என்பது தீத்தக்கரை வியாபாரம் என்பதற்கு ஒப்பானது. எந்த கூட்டமைப்பும் மக்களுக்கு பிரயோசனமில்லை என்பதே எமது கருத்தாகும் என்றார்.