Our Feeds


Friday, April 29, 2022

ShortTalk

ஹக்கீம் கொலைகாரன், சமூக துரோகி உடனடியாக கல்முனையை விட்டு வெளியேற வேண்டும் - ஹக்கீம் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட குரல்.

 

நாடளாவிய ரீதியாக இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் இன்று மாலை 1.30 மணியளவில் கோத்தா வீட்டுக்கு போ என்ற தொனியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அடங்களாக முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் சோபிக்கவில்லை. அரசுக்கு எதிராக கல்முனை மக்கள் கடுமையான அதிருப்தியில் இருந்தாலும் கூட இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலந்துகொள்ளாமைக்கான காரணம் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னின்று செய்தவர்கள் மீதான கோபமாகவே அமைந்துள்ளது.

கல்முனை பிரதான வீதியை இடைமறித்து கோத்தா அரசுக்கு பலமான எதிர்ப்பை வெளியிட்டு இடம்பெற்றுக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது இடையில் சென்ற சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் தமிழ்- முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து கல்முனை பிரச்சினையை உடனடியாக முடிக்க வேண்டும் என்று கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் சகோதரரும், பிரபல வர்த்தகருமான ஒருவர் ஆர்ப்பாட்டத்தின் இடையில் ஹக்கீம் கொலைகாரன், சமூக துரோகி உடனடியாக கல்முனையை விட்டு வெளியேற வேண்டும், சாணக்கியன், சுமந்திரன் இருக்கட்டும் என்று கோசத்தையும் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் இருந்த யாரும் இவர்களின் கோரிக்கைகளை கேள்விக்குட்படுத்த முன்வராமல் இருந்ததுடன் சிரேஷ்ட அரசியல்வாதிகள் இருக்கத்தக்கதாக மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொள்வதாக டாமஸ் சந்தியில் வைத்து அறிவித்து ஆர்ப்பாட்டத்தை முடித்துவைத்தார்.

கல்முனை ஐக்கிய சமாதான சதுக்க முன்றலில் ஆரம்பித்து டாமாஸ் சந்தியில் முடிவுற்ற இந்த பேரணியில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி முதல்வர் ரஹ்மத் மன்ஸூர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், சம்மாந்துறை மு.கா இளைஞர் அணியினர் என நூற்றுக்கும் குறைவானோர்களே இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

முஸ்லிங்களின் ஜும்மா தினமான இன்று ஜும்மா தொழுகை முடிவுற்ற நேரத்தில் இடம்பெற்ற இந்த பேரணியில் கலந்துகொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டாமல் விட்டதனையும், அம்பாறை மாவட்ட தமிழ்- முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொள்ளவில்லை என்பதையும் காணக்கூடியதாக இருந்ததுடன் இந்த அரசுக்கு எதிராக மக்கள் உச்சகட்ட கோபத்தில் இருப்பதையும் இந்த பேரணியானது குறித்த சிலரின் அரசியல் அஜந்தாவில் இடம்பெறுவதாகவும் இதனால் மக்கள் கலந்துகொள்ள விரும்பாமல் இருப்பதாகவும், பிராந்திய பிரச்சினைகளை தீர்க்காமல் அரசியல் செய்ய கல்முனைக்கு வந்துள்ளார்கள் என்றும் ஆர்ப்பாட்ட பிரதேசங்களில் இருந்த பொதுமக்களின் பல குரல்கள் எழுந்ததை அவதானிக்க முடிந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »