Our Feeds


Friday, April 8, 2022

SHAHNI RAMEES

‘ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியை உடன் கலைக்கவும்’ – ஹக்கீம் வலியுறுத்து

 

நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடிக்கு அனைவரும் இணைந்து பொறிமுறை ஒன்றை உருவாக்கி நிலைமையை சீராக்க வேண்டும். புத்திஜீவிகள், கல்விமான்கள் உள்ளடக்கிய காபந்து அரசு ஒன்றை உருவாக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஒருநாடு ஒரு சட்ட ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்து குழுக்களையும் அரசு வாபஸ் பெற வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர் அங்கு தெடார்ந்து தெரிவிக்கையில்,


 
இங்கு ஒவ்வொருவரும் தங்களது இயலாமையின் வாக்குமூலத்தினை பதிவு செய்கின்றனர். சபைக்கு வெளியில் நடப்பதை யாரும் யதார்த்தபூர்வமாக நோக்குவதில்லை. பொறுப்பை ஏற்கமுடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும். சிறுபான்மையினரை நோகடிக்கும் முடிவுகள் கடந்த காலத்தில் இடம்பெற்றன. ஒவ்வொருவர் மீதும் அநுர குமார மீதும் குற்றம் சுமத்துவதில் பயனில்லை. பொறுப்பை மீறி செயற்பட்டவாறு பெரும்பான்மையை காட்டுமாறு கோருகின்றனர்.

ஆளும் தரப்பிற்கு 69 இலட்சம் கிடைத்தது போன்று எதிரணிக்கும் 55 இலட்சம் வாக்கு கிடைத்தது. அவர்கள் தொடர்பிலும் எமக்கு பொறுப்புள்ளது. முன்பு காபந்து அரசு குறித்தும் தேசிய அரசு பற்றியும் இடைக்கால அரசு பற்றியும் பேசப்படுகிறது. இதற்கு முன்னர் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.


 
40 பேர் சுயாதீனமாகியுள்ளனர். அனைவரும் இணைந்து பொறிமுறை ஒன்றை உருவாக்குவோம்.

ஆர்பாட்டங்களில் எமது பிள்ளைகளும் கூட நாம் தடுத்தும் வீதியில் இறங்குகின்றனர். எனது மகளும் மருமகனும் கூட இறங்கினார்கள். அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அவர்களுக்கு உள்ளது. இளைஞர்கள் மத்தியில் எதிர்காலம் பற்றி அச்சம் உள்ளது. ஜனாதிபதி தனது பொறுப்பை மேற்கொள்ள வேண்டும். எமக்கு பாராளுமன்றத்திற்குள் உடன்பாட்டுடன் பலமான அரசை உருவாக்க முடியாவிட்டால் கல்விமான்கள், அறிஞர்களை உள்ளடக்கிய சபையொன்றை தற்காலிகமாக அமைப்போம். அதற்குத் தேவையான திருத்தங்களை செய்வோம்.
புத்துஜீவிகள், கல்விமான்கள் உள்ளடக்கிய காபந்து அரசு ஓன்றை உருவாக்குவோம். நிரந்தரமான வழி ஒன்றை தயாரித்து இன்றுள்ள நிலைமையை சீராக்குவோம். ஒரே நாடு ஒரே சட்ட ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்து குழுக்களையும் அரசு வாபஸ் பெற வேண்டும்.” – என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »