Our Feeds


Friday, April 22, 2022

ShortTalk

ஜனாதிபதி , வழங்கிய வாக்குறுதிகளை மறந்து உண்மைகளை மறைக்க முற்படுகிறார் - கர்தினால் பகிரங்க குற்றச்சாட்டு - VIDEO(எம்.மனோசித்ரா)


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களை அரசாங்கம் பாதுகாப்பதானது, அரசுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் ஊடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தமக்கு காணப்படும் தொடர்புகள் குறித்த உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவா என்று பன்னாட்டு தூதுவர்கள் முன்னிலையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தேனியார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட நினைவுகூரல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பேராயர் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் , 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தமக்கு என்ன ஆயிற்று என்பதை அறியாமல் 269 அப்பாவி பொதுமக்கள் ஒரு கணத்தில் பலியானதோடு பலர் காயமடைந்தனர். தமக்கு ஏன் இவ்வாறானதொரு அழிவு ஏற்பட்டது? இதற்கு யார் காரணம் ? என்ற கேள்விகளுக்கான பதில்களை கடந்த 3 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களுடன் நாமும் தேடிக் கொண்டிருக்கிறோம். இதற்கான உண்மையான பதில்களைப் பெற்றுக் கொள்ளும் உரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருக்கிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இது தொடர்பில் ஆராய்வதற்காக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்கள், நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பவற்றினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளில் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றின் ஊடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்திய பிரதான சந்தேக நபர்களாக ஸஹ்ரான் ஹாசிம் மற்றும் அவருடன் தற்கொலை செய்து கொண்ட 6 பேர் இனங்காணப்பட்டுள்ளதோடு , அவர்களை வழிநடத்தி ஒத்துழைப்பு வழங்கிய அடிப்படைவாதிகள் யார் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு அப்பால் பாரிய சூழ்ச்சி காணப்படுவதாக 2021 மே 7 ஆம் திகதி முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பிரபல தனியார் தொலைக்காட்சி ஊடகத்துடனான கலந்துரையாடலொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் அவரிடம் விசாரரணைகளை முன்னெடுத்து தகவல்களை தெரிந்துகொள்ளுமாறு நாம் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்திய போதிலும், அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமையை இந்த விசாரணைகளை புறக்கணிக்கும் செயற்பாடுகளில் ஒன்றாகவே காண்கிறோம்.

ஸஹ்ரான் தொடர்பிலும் , அவரது ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பிலும் முன்னரே தகவல்களை அறிந்திருந்தும் அவரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்காமை மற்றும் இந்திய புலனாய்வு பிரிவினால் 4 சந்தர்ப்பங்களில் பாதுபாப்புப் பிரிவினர் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டும் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை என்பவற்றுக்கான காரணம் என்ன என்பது இன்றும் பரம இரகசியமாகவே உள்ளது.

அதேபோன்று முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , ‘இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய ஸஹ்ரான் ஹாசிம் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவுக்கிடையில் தொடர்புகள் காணப்பட்டதாக ஏற்றுக் கொண்டமை, அவர்கள் இராணுவப் புலனாய்வு பிரிவினரிடமிருந்து ஊதியத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டமை , தாஜ் சமுத்திரா ஹோட்டலில் குண்டு தாக்குதல்களை மேற்கொள்ளச் சென்ற ஜமீல் என்ற நபர் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவு அறிந்திருந்ததோடு , சம்பவ தினத்தன்று தெஹிவளை ட்ரோபிகல் இன் ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்னர் அவரைத் தேடி அவரது வீட்டுக்குச் செல்வதற்கு இராணுவ புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தகவல்களை அறிந்திருந்தும் புலனாய்வு பிரிவினர் ஏன் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த தீவிரவாதிகளின் ஆயுத பயிற்சி மத்திய நிலையம் மற்றும் வண்ணாத்தவில்லு பகுதியில் 2018 ஆம் ஆண்டில் குண்டு தயாரிக்கக் கூடிய ஆயுத களஞ்சியசாலை என்பன கண்டு பிடிக்கப்பட்டன. எனினும் இந்த ஆயுதக் களஞ்சியசாலைக்கு வெடிமருந்துகளும் , டெட்டனேட்டர்களும் எவ்வாறு கிடைக்கப் பெற்றன என்பது இதுவரையிலும் யாராலும் அறியப்படவில்லை. இது தொடர்பிலாவது முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதா?

பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் ஸஹ்ரான் ஹாசிமை கைது செய்வதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா , 2018 ஜூலை 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் பிடியாணையைப் பெற்றுக் கொண்டார். இதன் போது , நாமல் குமார என்ற நபரால் ‘முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதியை கொலை செய்வதற்கு நாலக டி சில்வா சதி திட்டம் தீட்டியுள்ளார்’ என்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டார்.

இதன் மூலம் ஸஹ்ரான் தொடர்ந்தும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், அவரால் திட்டமிடப்பட்ட தாக்குதல்களை அவ்வாறே முன்கொண்டு செல்வதற்கும் வழியமைத்து கொடுத்தமை தெளிவாகிறது. எனினும் நாலக டி சில்வா மீதான இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் இன்று எந்த மட்டத்தில் காணப்படுகின்றன என்பதும் தெளிவின்றியுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதைப் போன்று , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2009 இல் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் மிகப்பெரிய ஆயுத களஞ்சியசாலை வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் அறிந்திருந்தும் , அது தொடர்பில் தேசிய பாதுகாப்பு சபையிடம் கேட்டறிவதற்கு அதனை கூட்டியிருக்க வேண்டும். எனினும் அவர் அதனை செய்யாததோடு , ஸஹ்ரானை கைது செய்வது குறித்து பல அதிகாரிகள் கோரிக்கை விடுத்த போதிலும் அவர் அதனை உதாசீனம் செய்துள்ளார். சிவில் பொறுப்புக் கூறலிலிருந்து முன்னாள் ஜனாதிபதி விலகியுள்ளார் என்பது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது வழக்கு தொடர முடியும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையிலும் முன்னெடுக்கவில்லை. அவ்வாறெனில் தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதியை பாதுகாப்பதானது அரசுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் ஊடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தமக்கு காணப்படும் தொடர்புகள் வெளிப்படுத்தப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவா?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமின்றி முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னான் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிலாந்த ஜயவர்தன என்போர் மீது வழக்கு தொடருமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. எனினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமை அவர்கள் ஊடாக ஏதேனும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாகவா என்ற சந்தேகமும் எழுகிறது. யாருடைய தேவைக்காக பூஜித் ஜயசுதந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பான வழக்கு விசாரணைகளை முறையாக முன்னெடுக்க முடியாதவாறு சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டது?

ஹேமசிறி பெர்னாண்டோ ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் , ‘இது தொடர்பில் அறிந்திருந்த போதிலும் , அது இந்தளவுக்கு பெரிய விடயமாக இருக்கும் என்று கருதவில்லை’ என பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனினும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தாக்குதல்களால் பலியானவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதன் பின்னணியில் இருப்பது நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் கொண்டுள்ள நபர் அல்லவா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது. சாரா ஜெஸ்மின் , ‘சொனிக்’ என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்படும் புலனாய்வு பிரிவு அதிகாரி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதா?

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்துக்காக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றனவா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2019 இல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதியளித்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றிக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதா? தற்போதைய ஜனாதிபதி, வழங்கிய வாக்குறுதிகளை மறந்து உண்மைகளை மறைக்க முற்படுவதோடு, பாரபட்சமாக செயற்படுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »