Our Feeds


Friday, April 22, 2022

ShortTalk

மனிதப் படுகொலை திட்டத்துக்காக பயன்படுத்திய ஸஹ்ரானின் வாகனத்தை பயன்படுத்த மனசாட்சி உறுத்தவில்லையா? -ஹரின் பெர்னாண்டோ - VIDEO



(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)


உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல், ருவன்வெலிசாயவில் குறிப்பிட்ட பொய்கள் மற்றும் இனவாதம் ஆகியவை அனைத்தும் ஒன்றிணைந்து சாபமாக அரசாங்கத்தை வாட்டி வதைக்கிறது. கடவுள் அனைத்தையும் வெளிக்கொண்டு வந்துள்ளார்.

ஸஹ்ரான் பாவித்த வாகனத்தை முன்னாள் பொலிஸ் விவகார அமைச்சர் பாவித்துள்ளமை வெட்கமடைய வேண்டிய செயலாகும். மனிதப் படுகொலை திட்டத்துக்காக பயன்படுத்திய வாகனத்தை பயன்படுத்த மனசாட்சி உறுத்தவில்லையா என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சபையில் ஆளும் தரப்பினை நோக்கி வினவினார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் மூன்றாண்டு நிறைவு குறித்து நாடாளுமன்றில் நேற்று (21) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில் கேள்விக்கு பதிலளிக்க ஆளும் தரப்பினர் ஆசனத்தில் இல்லை.

குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை போன்று நானும் பாதிக்கப்பட்டேன். அப்போதைய எதிர்க்கட்சியினரும் அவ்விடயம் குறித்து மாறுபட்ட கருத்துக்களை குறிப்பிட்டார்கள்.

குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்ற நூலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அறிக்கையின் சாராம்சம் பதிப்பு இதுவரை வழங்கப்படவில்லை.

முழுமையான அறிக்கை ஊடகங்களுக்கும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. 75 ஆயிரம் பக்கங்களையுடைய அறிக்கையை இதுவரை முழுமையாக வாசித்து முடிக்கவில்லை.

ஸஹ்ரான் பாவித்த வாகனத்தை பாவிப்பதற்கு முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு வெட்கமில்லை. மனித படுகொலைக்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பொலிஸ் அமைச்சர் எவ்வாறு பயன்படுத்த முடியும்.

பொரளை தேவாலயத்தில் குண்டு விவகாரம், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் குண்டு கைப்பற்ற விவகாரம் குறித்து இதுவரை உண்மை வெளிப்படவில்லை. இவையனைத்தும் சோடிக்கப்பட்ட நாடகங்கள்.

அனைத்து சாபங்களும் இன்று அரசாங்கத்தை வாட்டி வதைக்கின்றன. ருவன்வெலிசாயவில் குறிப்பிட்ட பொய் முழு அரசாங்கத்தையும் சபிக்கிறது.

உதயகம்மன்பில தரப்பினரது செயற்பாடுகள் அனைத்தும் நாடகம் நாட்டு மக்கள் ” கோ ஹோம் கோடா” என்கிறார்கள் இவர்கள் குறிப்பிடுகிறார்கள் “கோ ஹோம் மஹிந்த என இவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மகாசங்கத்தினர், அனைத்து மத தலைவர்களும், மக்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதி உட்பட அரசாங்கம் முழுமையாக பதவி விலகுமாறு கூறியுள்ளனர். இருப்பினும் இவர்கள் பதவி விலகாமல் உள்ளார்கள் வெட்கமில்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »