நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப்புக்களை இன்று அம்பலப்படுத்தப்படவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்தார்.
அதன்படி பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் முதல் பிரதேசசபை உறுப்பினர்கள் வரையிலான பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பாரியளவிலான “கோப்புகளை” இன்று நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி இன்றைய தினம் குறித்த ஊடக சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் அங்கு பெருமளவான கோப்புகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஒவ்வொரு கோப்பாக அவர் தெளிவுப்படுத்தும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்க காலத்தின் போது 3 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக தகவலொன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அனுர இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
2015 முதல் 2019 வரையான காலத்தில் தேசிய மத்திய கலாச்சார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் கலாச்சார அமைச்சரின் செலவு அறிக்கை முக்கியமானது. 146 செலவு அறிக்கைள்.
நிதியம் மற்றும் நிதியத்தின் உறுப்பினர்களின் எந்த அனுமதியும் இன்றி நிதியத்தின் பணம் செலவிடப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவின் நேரடியான உத்தரவின் கீழேயே இந்த செலவுகளை செய்தாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
செலவு செய்து முடிந்த பின்னர் 2019.11.15ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவசர பணிப்பாளர் குழு நியமிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க, ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, அகில விராஜ் , மனோ கணேசன், பேர்னாட் பிரியந்த இவர்கள் பணிப்பாளர்கள் குழுவில் இருந்தனர்.
பணிப்பாளர் குழுவின் தலைவர் என்ற முறையில் ரணில் விக்ரமசிங்க இதில் கையெழுத்திடவில்லை. பிரதமரின் செயலாளர் ஏக்கநாயக்க கையெழுத்திட்டுள்ளார். அகில விராஜ் உட்பட மேலும் சிலர் கையெழுத்திடவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை அறிக்கை எமக்கு நேற்று கிடைத்தது. அதனை சரியாக தொகுத்துக் கொள்ள முடியவில்லை. மத்திய கலாச்சார நிதியத்தின் சுமார் மூன்று பில்லியன் ரூபா நிதி முறைகேடு தொடர்பாக கோப்பே இது என சுட்டிக்காட்டியுள்ளார்.