Our Feeds


Tuesday, May 31, 2022

SHAHNI RAMEES

ஐக்கிய அரபு இராச்சியமும் இஸ்ரேலும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் இன்று கையெழுத்திட்டன.

 

இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஓர்னா பார்பிவாய், ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் தாக் அல் மாரி ஆகியோர் துபாயில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அரபு நாடொன்றுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டமை இதுவே முதல் தடவையாகும். எனவே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையாக இது கருதப்படுகிறது.


இந்த ஒப்பநதம் கையெழுத்திடப்பட்டவுடன், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இஸ்ரேலியத் தூதுவர் அமீர் ஹாயேக், ‘மப்ரூக்’ என டுவிட்டரில் பதிவிட்டார். அரபு மொழியில் ‘வாழ்த்துகள்’ என இதற்கு அர்த்தமாகும்.

அதேவேளை, இஸ்ரேலுக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மொஹம்மத் அல் காஜா, ஒப்பந்தம் ‘முன்னெப்போதுமில்லாத ஒரு சாதனை’ என புகழ்ந்துள்ளார்.

‘எமது இரு நாடுகளும் வர்த்தகத்தை அதிகரிக்கவும் ,தொழில்வாய்ப்புகளை உருவாக்கவும், புதிய திறமைகளை ஊக்குவிக்கவும், ஒத்துழைப்புகளை ஆழமாக்குவதற்கும் இணைந்து செயற்படும் நிலையில், இரு நாடுகளிலுமுள்ள வர்த்தக நிறுவனங்கள், வேகமாக சந்தையை அணுகுதல் மற்றும் குறைந்த வரிகளால் நன்மையடையும்’ என மொஹம்மத் அல் காஜா தெரிவித்துள்ளார்.


இரு தரப்பு உறவுகளை சுமுகமாக்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியமும் இஸ்ரேலும் 2000 ஆம் ஆண்டு இணங்கியிருந்தன. அமெரிக்க அனுசரணையுடன் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

எகிப்து, ஜோர்டான் ஆகியவற்றுக்கு அடுத்து இஸ்ரேலுடன் உறவுகளை சுமுகமாகக்கிய 3 ஆவது அரபு நாடு ஐக்கிய அரபு இராச்சியம் ஆகும்.

இரு நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம், 96 சதவீத பொருட்களுக்கான வரி நீக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இவ்விரு நாடுகளுக்கிடையில் நடைபெற்ற வர்த்தகத்தின் பெறுமதி 900 மில்லியன் டொலர்கள் என இஸ்ரேலிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக்தின் பெறுமதி 2022 ஆம் ஆண்டில் 2 பில்லியன் டொலர்களை விஞ்சும் எனவும், 5 வருடங்களில் அது 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் எனவும் ஐக்கிய அரபு இராச்சியம் – இஸ்ரேல் வர்த்தக பேரவையின் தலைவர் டோரியன் பராக் கூறியுள்ளார்.

தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு, தூர கிழக்கு சந்தைகளை நாடும் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கான மையமாக துபாய் வேகமாக மாறிவருகிறது என அவர் கூறியுள்ளார். இவ்வருட இறுதிக்குள் சுமார் 1,000 இஸ்ரேலிய நிறுனங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இயங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »