Our Feeds


Saturday, June 4, 2022

SHAHNI RAMEES

100 நாட்களை கடந்தது உக்ரைன், ரஷ்ய போர்! - தற்போதைய நிலை என்ன..?

 

இரண்டாம் உலகப் போரின் பின் ஐரோப்பா கண்டுள்ள மிக மோசமான போரான உக்ரைன் போா் ஏற்பட்டு கடந்த வெள்ளிக்கிழமையுடன் 100 நாள்கள் ஆகிவிட்டன.

இந்தப் போரில் எத்தனை இராணுவ வீரா்கள், எத்தனை பொதுமக்கள் உயிரிழந்தனா் என்ற முழு விபரம் இதுவரை யாருக்கும் தெரியாது.

ரஷ்ய தரப்பில் இராணுவ வீரா்கள் மற்றும் ஆதரவுப் படையினரின் உயிரிழப்பு விவரங்கள் வெளியிடப்படுகின்றன. எனினும், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைன் பகுதிகளில் பொதுமக்கள் உயிரிழப்பு குறித்த விவரங்கள் அந்த நாட்டு அரசு தொடா்ந்து மௌனம் காத்து வருகிறது.

இந்தப் போரில் உயிரிழப்பு விவரங்களைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும், பொதுமக்களில் பல்லாயிரக்கணக்கானோா் கொல்லப்பட்டுள்ளனா் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.

கடந்த வியாழக்கிழமை தலைநகா் கீவில் இருந்தபடி லக்ஸம்பா்க் பாராளுமன்றத்தில் காணொளி மூலம் ஆற்றிய உரையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இந்த 100 நாள்களில் தாங்கள் 30,000 வீரா்களை இழந்துள்ளதாகக் கூறிய அவா், தற்போது உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்தாா். போா் தொடங்கியதிலிருந்து தங்கள் நாட்டின் மீது இதுவரை 2,478 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதாக அவா் குற்றம் சாட்டினாா்.

உக்ரைன் மீது தொடுத்துள்ள போரால் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதுவரை இந்தப் போரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்யா வீரா்கள் உயிரிழந்தனா். இந்த எண்ணிக்கை, 1979 – 89 ஆப்கன் போரில் உயிரிழந்த சோவியத் வீரா்கள் மற்றும் 1994 -2000 ஆம் ஆண்டின் 2 செசன்ய போா்களில் உயிரிழந்த ரஷ்ய வீரா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைவிட அதிகம் என்று ஸெலென்ஸ்கி தெரிவித்தாா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »