நாவலப்பிட்டி நகரில் நீண்ட காலமாக போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி காவல்துறையினர், கம்பளை காவல்துறையினர் மற்றும் கம்பளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே, குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பிரதான சந்தேகநபர் ஒருவரும், 11 போதைப்பொருள் வர்த்தகர்களும் உள்ளடங்குவதாக, விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை கைது செய்தபோது, அவர்களிடமிருந்து 2,880 மில்லிகிராம் அளவிலான ஹெரோய்ன் மற்றும் 560 மில்லிகிராம் அளவிலான கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் 29 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் நாவலப்பிட்டி, ஓவிட்ட, ஆகரஓயா, ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த சந்தேநபர்கள் நேற்றைய தினம் நாவலப்பிட்டி பதில் நீதவான் சுனெத்ரா கொட்டவலகெதர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
