ஓமான் நிறுவனத்துடன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் நான்கு மாதக் காலப்பகுதிக்கான ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஒப்பந்த நடவடிக்கைக்கு மேலதிகமாக எதிர்வரும் நாட்களில் உடனடியாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டிற்கு அனுப்புமாறு குறித்த நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய கடன் வசதி திட்டத்தின் கீழ் நாட்டை வந்தடைந்த இறுதி கப்பலில் இருந்த 40, 000 மெட்ரிக் டன் டீசல் விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 41000 மெட்ரிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பலை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
