எரிபொருள் கொள்வனவு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 2 அமைச்சர்கள் இன்று ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 9,000 மெற்றிக் டன் டீசலும், 6,000 மெற்றிக் டன் பெற்றோலும் மாத்திரமே கையிருப்பில் உள்ளது.
இந்தநிலையில், நாளைய தினம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் இருந்து 10,000 மெற்றிக் டன் டீசலை பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கடன் திட்டத்தின் அடிப்படையின் கீழ், எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகளின் நிறுவனங்களிடம் இருந்து இணக்கப்பாட்டின் அடிப்படையில் எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பான யோசனை ஒன்றை நாளை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
