எனக்கு 960 மணித்தியாளமே நேரம் இருக்கிறது, அந்த காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்ய முடியாவிட்டால் பதவி துறந்து வீடு செல்வேன் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசும் போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “மக்கள் பட்டினியால் வாடும் போது, நாம் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை. எனவே, சென்று மக்களுக்கு எதையாவது செய்” என்று என் அம்மா எனக்கு சொல்லித்தான் பாராளுமன்றம் அனுப்பி வைத்தார் எனவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா இதன் போது குறிப்பிட்டார்.
6 மாதங்களுக்குள் உங்களாலும் முடியாவிட்டால், பதவி துறந்து வாருங்கள் என மனைவியும் எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதேபோல ‘தாத்தா கம் ஹோம்’ அதாவது அப்பா வீட்டுக்கு வாங்க என என் வீட்டுக்கு முன் பதாகை ஏந்தப்படும் என எனது பிள்ளைகளும் அறிவித்து விட்டனர்.
அந்த வகையில் எனக்கான காலம் 6 மாதங்கள். அதாவது 960 மணித்தியாலங்களே! அவ்வளவுதான் எனக்கு வேலை செய்வதற்கான நேரம். அந்த காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்யாவிட்டால் ‘தாத்தா கம் ஹோம்’ எனக்கூறி பிள்ளைகள் வந்துவிடுவார்கள். அப்போது எனக்கு வீடு செல்ல வேண்டிவரும் என்றார் அமைச்சர் தம்மிக பெரேரா!
அத்துடன், தனது பணி இலக்குகளையும் தம்மிக்க பெரேரா பட்டியலிட்டு ஆவணமொன்றை வெளியிட்டுள்ளார். டொலர்களை உள்ளீர்ப்பதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளார்.
வங்குரோத்தடைந்த கம்பனிகளை பொறுப்பேற்று, அதனை கட்டியெழுப்பும் நிர்வாக திறன் உள்ள தனக்கு, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சவாலையும் வெற்றிகொள்ள முடியும் எனவும் அவர் இதன் போது நம்பிக்கை வெளியிட்டார்.