Our Feeds


Saturday, June 25, 2022

SHAHNI RAMEES

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் – பேராயர்



 இரண்டு, மூன்று ஆண்டுகள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

றாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேராயர் கருத்து தெரிவிக்கையில்….

தற்போதைய சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு சகோதரத்துவமும், ஒத்துழைப்பும் அவசியமாகும். நாடு என்பது அரசியல் தலைவர்கள் அல்லர், மக்களாவர். மக்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும். அரசியல்வாதிகளுக்கு உதவிசெய்வது பொய் வேலையாகும். ஏனெனில், பல ஆண்டுகளாக இந்த நாட்டின் வளங்களை வீணடிக்கும் செயல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. ஒரு தரப்பு அல்ல, பல தரப்பினர் இதில் தொடர்புபட்டுள்ளனர். 7, 8 பில்லியன் என்ற பாரிய கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது? மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது? ஏன் இவை பொறுப்பற்ற முறையில் வீணாக்கப்பட்டன என்பது குறித்து எப்போதேனும் ஒரு நாளில் விசாரிக்கப்பட வேண்டும் அதுதான், மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பத்திற்கு ஒரு தீர்வாகும்.

இந்தப் பணத்தை வீணடித்தவர்கள் யாவர் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.இந்த முட்டாள்தனமாக தீர்மானத்தை எடுத்தவர்கள் யாவர்? மக்களை சௌபாக்கியத்தை நோக்கி கொண்டுசெல்லத்தான், தலைவர் ஒருவருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அந்த வாக்குறுதிதான் வழங்கப்பட்டது.

எனவே, 2, 3 ஆண்டுகளில் நாட்டை முழுமையாக கையேந்தும் நிலைக்கு கொண்டுசென்றவர் யாவர் என்பது குறித்து முழுமையாக விசாரித்து, அவர்களிடமிருந்து அவற்றை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமாயின் மீளப்பெற வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »