Our Feeds


Monday, June 27, 2022

ShortNews

பெட்ரோல் இல்லை! - வீட்டிலேயே குழந்தையை பிரசவித்த தாய்.



எரிபொருள் இன்மையினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், தாய் ஒருவர், தமது வீட்டிலேயே குழந்தையை பிரசவித்துள்ள சம்பவம் நிக்கவரெட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது.


நிக்கவரெட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று அதிகாலை 5.10 அளவில் குறித்த தாய், தமது மூன்றாவது குழந்தையை பிரசவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சத்திரசிகிச்சை முறையில் குழந்தையை பிரசுவிப்பதற்கு திகதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு முன்னதாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், அந்த சந்தர்ப்பத்தில் நிக்கவரெட்டிய - திவுலேகொட குடும்ப நல அதிகாரிக்கு தொலைபேசி வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், தமது கணவருடன், குறித்த வீட்டிற்கு சென்ற குடும்ப நல அதிகாரி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில், குடும்ப நல உத்தியோகத்தர் பயணித்த உந்துருளியில் குறைந்தளவான எரிபொருளே காணப்பட்டதாக, அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தாய் மற்றும் சேய் ஆகியோர் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில், கருத்துரைத்த அரச குடும்ப நல சுகாதார சேவை சங்கத்தின் தலைவர், தேவிகா கொடித்துவக்கு, குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டியது அவசியமாகும் என தெரிவித்தார்.

ஸ்தலங்களுக்கு அவர்கள் பயணித்து, தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

தாய் மற்றும் சேய் ஆகியோரை பாதுகாக்கும் பொறுப்பான பணிகளில் அவர்கள் ஈடுபடுவதால், அவர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்ப நல சுகாதார சேவை சங்கத்தின் தலைவர், தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »