Our Feeds


Wednesday, June 1, 2022

ShortTalk

முஷாரப் எம்.பி, மக்கள் காங்கிரஸிருந்து நீக்கம்: நாடாளுமன்ற பொதுச் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அறிவிப்பு



மப்றூக் 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து – அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஷாரப் நீக்கப்பட்டுள்ளார்.


இது தொடர்பில் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் பீடத்தில் நேற்று (31) நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஒழுக்காற்று விசாரணைக்காக தனது சட்டத்தரணிகள் மூவருடன் முன்னிலையாகியிருந்தார்.


இந்த விசாரணையின் பின்னரே கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினரை விலக்குவதற்கு அரசியல் பீடம் முடிவு செய்துள்ளது.


மக்கள் காங்கிரஸின் தீர்மானங்களுக்கும் யாப்புக்கும் விரோதமாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் செயற்பட்டுள்ளதாக தெரிவித்து, அவரை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை மக்கள் காங்கிரஸின் அரசியல் பீடம் எடுத்துள்ளது.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தீர்மாங்களுக்கு எதிராக நாடாளுமன்றில் பல்வேறு தடவை செயற்பட்ட முஷாரப், ராஜாங்க அமைச்சர் பதவியினையும் பெற்றிருந்தார்.


நேற்று ஒழுக்காற்று விசாரணையினை மேற்கொண்ட கட்சியின் அரசியல் பீடம் முன்பாக ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கங்களை வழங்கவில்லை என, அரசியல் பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முஷாரப், 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.


இதேவேளை, ஒழுக்காற்று விசாரணைக்காக நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் ஆஜராகியிருந்ததாகவும், ஆயினும் நேரமின்மை காரணமாக அவரை வேறொரு தினத்தில் ஆஜராகுமாறு கட்சியின் அரசியல் பீடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.


நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் நேற்று ஒழுக்காற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தும் அவர் ஆஜராகவில்லை. எனினும் தனக்கு சுகயீனம் காரணமாக வரமுடியவில்லை என்றும் வேறோரு தினத்தில் வருவதாகவும் இஷாக் ரஹ்மான் அறிவித்துள்ளார் எனவும் தெரியவருகிறது.


நேற்றைய ஒழுக்காற்று விசாணைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம். சஹீட் தலைமை தாங்கினார்.


நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவரின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார்.


ஆயினும், கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வதற்கான வாய்ப்பு, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »