Our Feeds


Wednesday, June 22, 2022

ShortTalk

மாளிகாவத்தையில் தடுப்புக் காவலில் ஒருவர் சுட்டுக் கொலை: பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட மூவருக்கு விளக்கமறியல்! - நடந்தது என்ன?



(எம்.எப்.எம்.பஸீர்)


கொழும்பு – வாழைத் தோட்டம் பொலிஸ் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாளிகாவத்தை – ரயில்வே ஊழியர்கள் விடுதி தோட்டத்தில், தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் விலாச்சிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க இதற்கான உத்தரவை நேற்று ( 21) பிறப்பித்துள்ளார்.


விலாச்சிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க, உப்புவெளி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ருச்சிர சந்திம, படல்கம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் ( 610704) தயாவங்ச ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளவர்களாவர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ், மாளிகாவத்தை ரயில் ஊழியர்கள் விடுதித் தோட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்துன் லசித்த குமார் எனும் நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து வாழைத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் ஐவரை சந்தேக நபர்களாக பெயரிட சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சுருக்கமுறையற்ற வழக்கு விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறும் வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தனர்.

அதன்படி மேற்படி மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் நேற்று (21) நீதிமன்றில் சரணடைந்த பின்னர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்ட மா அதிபர் சந்தேக நபராக பெயரிட ஆலோசனை வழங்கியுள்ள 5 பேரில் ஏனைய 2 பேரும், வர்த்தகர் சியாம் படுகொலை வழக்கில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தவுடன் சேர்த்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களாவர்.

பொலிஸ் கான்ஸ்டபிள் (51799) சரத் சந்ர, கான்ஸ்டபிள் (61816) கெளும் ஆகியோரே அவர்களாவர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி ஆரியரத்ன மற்றும் சார்ஜன்ட் திஸாநாயக்க ஆகியோர் இது குறித்து நேற்று நீதிமன்றுக்கு அறிக்கையிட்டமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »