Our Feeds


Tuesday, June 21, 2022

SHAHNI RAMEES

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு தீர்மானம்: இடைக்கால பிரதமராகிறார் யாயிர் லபிட்

 

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு அந்நாட்டின் ஆளும்கூட்டணிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. பிரதமர் நெப்தலி பென்னட் திங்கட்கிழமை இதை அறிவித்தார்.
2 மாதங்களில் பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தல் நடைபெறும் வரை, புதிய பிரதமராக வெளிவிவகார அமைச்சர் யாயிர் லபிட் பதவியேற்கவுள்ளார். தற்போதைய பிரதமர் நெப்தலி பென்னட் பதவியிலிருந்து விலகி, வெளிவிவகார அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற இஸ்ரேலிய பொதுத் தேர்தலின்பின், கடும்போக்குவாதிகள். இடதுசாரிகள் மற்றும் முதல்தடவையாக அரபு இஸ்லாமியர்கள் இணைந்து கூட்டணி அமைத்து, அரசாங்கத்தை ஸ்தாபித்தனர்.

முன்னாள் பிரதமரான லிக்குட் கட்சியின் தலைவர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் நோக்குடன் இக்கூட்டணி அமைக்கப்பட்டது.



தற்போதைய பிரதமர் நெப்தலி பென்னட் (இடது), வெளிவிவகார அமைச்சர் யாயிர் லப்பிட்

ஆனால், இஸ்ரேலிய அரசாங்கத்துக்கான ஆதரவை பலர் விலக்கிக் கொண்டதையடுத்து, அரசாங்கம் பெரும்பான்மைப் பலத்தை இழந்துள்ளது.
ஆளும் கூட்டணியிலிருந்த அரபு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இம்மாத முற்பகுதியில் தமது ஆதரவை விலக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தை அடுத்தவாரம் கலைக்கக்கோரு;ம பிரேரணைக்கு தான் ஆதரவளிக்கவுள்ளதாக பிரதமர் நெப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான உடன்பாட்டின்படி, நியூ ரைட் (பதிய வலது) கட்சியின் தலைவரான நெப்தலி பென்னட் முதல் இரு வருடங்களுக்கும், யேஷ் அட்டிட் கட்சியின் தலைவரான யாயிர் லபிட் அடுத்த இரு வருடங்களுக்கும் பிரதமராக பதவி வகிப்பற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. இந்நிலையில், இடைக்கால பிரதமராக யாயிர் லபிட் பதவி வகிக்கவுள்ளார்.

முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பெஞ்சமின் நெத்தன்யாஹு புதிய நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இஸ்ரேலிய வரலாற்றில் மிக மோசமான அரசாங்கம் முடிவுக்கு வருகிறது என விமர்சித்துள்ளார்.

இதேவேளை, ஒக்டோபர் 25 ஆம் திகதி புதிய தேர்தல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக இஸ்ரேலின் ஹாரெட்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இத்தேர்தல் இஸ்ரேலில் 4 வருடகாலத்தில் நடைபெறும் 5 ஆவது பொதுத்தேர்தலாக அமையும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »