Our Feeds


Wednesday, June 1, 2022

ShortTalk

பாகிஸ்தான் – இலங்கை ஒரு நாள் மகளிர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்.



(நெவில் அன்தனி)


பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் கராச்சியில் இன்று ஆரம்பமாகவுள்ளது.


இந்தத் தொடரானது 10 அணிகள் பங்குபற்றும் ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் 2022 – 2025 சுழற்சியின்  (ICC Women’s Championship cycle – ICC WC) முதலாவது கிரிக்கெட் தொடராகவும் அமைகின்றது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் நடந்து முடிந்த மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 3 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முழுமையான வெற்றியீட்டிய பாகிஸ்தான், சர்வதேச ஒருநாள் தொடரிலும் அந்த வெற்றியைத் தொடர்வதற்கு முயற்சிக்க உள்ளது.

மறுபுறத்தில் பாகிஸ்தானுடனான அத் தோல்வியை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை கடுமையாக முயற்சிக்க உள்ளது.

ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்புக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் நடத்துவது இதுவே முதல் தடவையாகும். இதன் காரணமாக சொந்த நாட்டு அனுகூலத்தை பாகிஸ்தான் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, இருபது 20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்து தற்போது நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் தமக்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் என இலங்கை நம்புகிறது.

மேலும், நியூஸிலாந்தில் இந்த வருடம் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இலங்கை தவறவிட்டிருந்தது. எனினும், 2025இல் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடி தகுதி பெறுவதை குறிக்கோளாகக் கொண்டு ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை பங்குபற்ற உள்ளது.

1998இலிருந்து 2018 வரையான காலப்பகுதியில் இரண்டு அணிகளும் விளையாடியுள்ள 30 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை 21 தடவைகள் வெற்றிபெற்றுள்ளதுடன் 9இல் மாத்திரம் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.

எவ்வாறாயினும் இரண்டு அணிகளுக்கும் இடையில் தம்புளையில் 2018இல் கடைசியாக நடைபெற்ற மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 3 – 0 என வெற்றிபெற்றிருந்தது.

அந்த 3 போட்டிகளிலும் 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களை இலங்கைக்கு வெற்றி இலக்குகளாக நிர்ணயித்த பாகிஸ்தான் 2 போட்டிகளில் 250க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்திருந்தது.

அந்த  தொடரில்    இலங்கை பெற்ற அதிகபட்ச மொத்த எண்ணிக்கை 181 ஓட்டங்களாகும்.

இந் நிலையில் 2018இல் அடைந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெற்றியீட்டி அத் தோல்விகளை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் இலங்கை சகல துறைகளிலும் பிரகாசிப்பது அவசியமாகும்.

நட்சத்திர துடுப்பாட்ட வீராங்கனையும் அணித் தலைவியுமான சமரி அத்தபத்து இந்தத் தொடரில் தனது முழுமையான ஆற்றல்களை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று ஹாசினி பெரேரா, ஓஷாதி ரணவீர, இனோக்கா ரணவீர, உதேஷிக்கா ப்ரபோதனி, சுதந்திகா குமாரி, ப்ரசாதனி வீராக்கொடி ஆகிய சிரேஷ்ட வீராங்கனைகள் தமது முழுமையான பங்களிப்பை வழங்குவது அவசியமாகும்.

10 நாடுகள் பங்குபற்றும் ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் ஒவ்வொரு நாடும் 8 நாடுகளுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் வகையில் ஐசிசியினால் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனது சொந்த மண்ணிலும் அந்நிய மண்ணிலும் தலா 4 தொடர்களில் விளையாடும்.

குழாம்கள்

இலங்கை: சமரி அத்தபத்து (தலைவி), ஹாசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம, ஹன்சிமா கருணாரட்ன, ப்ரசாதனி வீரகொடி, நிலக்ஷி டி சில்வா, கவிஷா டில்ஹாரி, அமா காஞ்சனா, அச்சினி குலசூரியா, இனோக்கா ரணவீர, உதேஷிகா ப்ரபோதனி, சுகந்திகா குமாரி, சச்சினி நிசன்சலா, ஓஷாதி ரணசிங்க, அனுஷ்கா சஞ்சீவனி.

பாகிஸ்தான்: பிஸ்மா மாறூவ் (தலைவி), அய்மான் அனவர், ஆலியா ரியாஸ், அனாம் அமின், டயனா பெய்க், பாத்திமா சானா, குலாம் பாத்திமா, குல் பெரோஸா, முனீபா அலி சித்திக்கி, நிதா தார், ஒமய்மா சொஹெய்ல், சாதாப் ஷமாஸ், சாதியா இக்பால், சித்ரா அமின், சித்ரா நவாஸ்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »