Our Feeds


Monday, June 27, 2022

ShortNews

கிழக்கு மாகாண மக்களுக்கு எந்தவொரு பொருளாதார நெருக்கடியும் இல்லையென ஆளுனர் காட்ட முனைகிறார் - இம்ரான் MP குற்றச்சாட்டு



கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத் இந்தப் பொருளாதார நெருக்கடியால் கிழக்கு மாகாண மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் காட்ட முனைகின்றார் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்


அவர் மேலும் தெரிவித்ததாவது,


எரிபொருள் நெருக்கடி காரணமாக இவ்வாரம் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய தினங்களில் மாத்திரம் நடைபெறும் என கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம் தகவல் வெளியிட்டிருந்தார். சில மணித்தியாலயங்களுள் அதே மாகாணக் கல்விப் பணிப்பாளர் வாரத்தில் 5 தினங்களும் பாடசாலை நடைபெறும் என அறிவித்துள்ளார்.


அவரது இந்த பின்னைய அறிவிப்புக்கு கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் நிரப்புவதற்காக அதிபர், ஆசிரியர்கள் நாட்கணக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்து நிற்கின்றனர். மாணவர் பஸ்சேவைக்கு எரிபொருள் இல்லை. இதனால் தான் நகர்ப்புறப் பாடசாலைகளை பாடசாலைகளை மூடும் தீர்மானம் கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்டது. 


இதே பிரச்சினை கிழக்கு மாகாணத்திலும் உண்டு. ஏராளமான ஆசிரியர்களினதும், கல்விப் புலத்தின் ஏனையோரினதும் மோட்டார் சைக்கிள்கள் பெற்றோல் இன்மையால் வீட்டிலே முடங்கியுள்ளது. இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஆளுநர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. ஆனால் பாடசாலைகளை வாரத்தில் 5 நாட்களும் நடத்த வேண்டுமென என அவர் பணித்துள்ளார். 


கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர் காட்ட முனைவதே அவரது இந்த முடிவுக்குக் காரணமாகும். அவரதும், அவரது பரிவாரத்தினரது வாகனங்களுக்கும் எரிபொருள் பிரச்சினை இல்லை என்பதால் ஏனையோருக்கும் அப்படி இருப்பதாகவே அவர் நினைக்கிறார். மக்களின் கஷ;ட நிலையை இன்னும் அவர் உணரவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.


இந்த அரசு சகல அரச உத்தியோகத்தர்களையும் வீதிக்கும், வரிசைக்கும் கொண்டு வந்து விட்டது. பல அரச உத்தியோகத்தர்கள் நாளாந்தம் எரிபொருள் வரிசைகளில் நிற்கின்றனர். இந்த நிலையை கிழக்கு ஆளுநர் உணர வேண்டும்


சுகாதாரத்துறையைச் சேர்ந்தோருக்கு வாரத்தில் ஒரு நாள் எரிபொருள் வழங்குவதாக அரசு அறிவித்தாலும் அதுவும் திருப்திகரமாக இல்லை. அந்த நாளில் அநேகமான  சுகாதாரத்துறையினர் எரிபொருள் நிரப்பு நிலைய வரிசைக்கு வந்து விடுகின்றார்கள். இதனால் வைத்தியசாலைகளில் சுகாதார சேவை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. பல நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.


அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளே இதற்கு காரணமாகும். மக்களின் சுமையைக் குறைப்பதற்கு எந்தவொரு திட்டமும்  ஜனாதிபதியிடம் இல்லை. அதேபோல பிரதமர் மற்றும் அமைச்சர்களிடமும் இல்லை. இதுவே மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணம்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »