Our Feeds


Wednesday, June 22, 2022

ShortTalk

பெளத்த சிங்கள மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு - தமிழ் MP க்களுக்கு சரத் வீரசேகர கடும் எச்சரிக்கை!



(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


குருந்தூர் மலை வழிபாட்டு நிகழ்வை தடுத்து நிறுத்திய வடக்கு தமிழ் எம்.பிக்கள் இன்னும் பிரபாகரனின் நடவடிக்கைகளையே ஆதரித்து வருகின்றனர். பெளத்த சிங்கள மக்களின் பொறுமையை இயலாமையாக நினைக்க வேண்டாம்.

எமது பொறுமைக்கும் எல்லை உண்டு. அத்துடன் 52 சத வீதமான தமிழ் மக்கள் சிங்கள மக்களுடனேயே வாழ்கின்றனர். இனவாதம் பேசி மக்களை பிளவுபடுத்த வேண்டாம் என ஆளும் கட்சி உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவிததார்.

நாடாளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் பிரகாரம் புத்தசானத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெளத்த நாடு என்றாலும் ஏனைய மதங்களுக்கும் அந்த உரிமைகளை வழங்கி இருக்கிறோம். நாட்டில் முஸ்லிம் பள்ளிவாசல்கள், இந்து கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் இருப்பதன் மூலம் இது உறுதியாகிறது. என்றாலும் நாங்கள் இவ்வாறு செயற்பட்டாலும் வடக்கில் பிரிவினைவாத அரசியல் தலைவர்கள் புத்த சாசனத்துக்கு கெளரவம் அளிப்பதில்லை.

கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னர் வடக்கில் நாகதீபத்தில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கு வடக்கின் முதலமைச்சர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள் அங்கு தொடர்ந்து இடம்பெற்று வந்திருக்கின்றன. அதன் அடிப்படையிலேயே கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் தலைமையில் முல்லைத்தீவு குருந்தூர்மலை சைத்தியில் தாதுகோபுரம் வைக்கும் நிகழ்வு குண்டர்கள் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

பெளத்த நாட்டில் புத்தசாசனத்தை போசிப்பதற்கு தமிழத் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் அது பாரிய பிரச்சினை. இதுதொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்தவேண்டும்.

முல்லைத்தீவு குருந்தூர் மலை இரண்டாயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்தது என மகாவம்சத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021இல் தொல்பொருள் திணைக்களம் அங்கு அகழ்வு நடவடிக்கை மேற்கொண்டது. இதன்போது பல பெளத்த தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

அத்துடன் இந்த இடத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவித்து செய்யவேண்டும் என நீதிமன்ற தீர்ப்பு இருக்கின்றது. அதன் பிரகாரம் அறிவிக்கவேண்டிய அனைத்து
தரப்பினருக்கும் அறிவித்து, மகாநாயக்க தேரர்கள் பலரும் அந்த இடத்துக்கு வந்தனர் , அந்த கோபுரத்துக்கு புதையல் வைக்கும் நிகழ்வை தமிழ் எம்பிக்களான செல்ராஜா கஜேந்திரன், விநோனோக ராதலிங்கம் ஆகியோர் ஒருசில குண்டர்களுடன் வந்து, தேரர்களுக்கு அங்கு மலர் பூஜையை மேற்கொள்வதற்கு கூட இடமளிக்கவில்லை.

எனவே வடக்கு தமிழ் எம்.பிக்களின் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். வடக்கில் விடுதலைப் புலிகள் மக்களை கொலை செய்யும்போது கொழும்பில் தமிழ் மக்கள் தேர் இழுத்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் கட்சியாகும். பிரபாகரன் செய்த வேலைகளையா இவர்கள் ஆதரிக்கின்றனர்.

மகாநாயக்க தேரர்கள் அங்குவந்து, மலர் பூஜை நடத்த இடமளிக்காமல் தடுத்ததையிட்டு வெட்கப்பட வேண்டும். ஆனால் நாங்கள் தமிழ் மக்களின் மத உரிமைகளை மதித்து வருகின்றோம்.

எனவே சிங்கள பெளத்தர்கள் இந்த விடயத்தில் பொறுமையாக இருந்தார்கள். 

அவர்களின் பொறுமையை இயலாமையாக நினைக்க வேண்டாம். இந்த பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் தமிழ் மக்களுக்கு நாட்டில் எந்த பிரதேசத்திலும் குடியமர முடியும் என்றால் சிங்கள மக்களுக்கும் அந்த உரிமை இருக்கின்றது. வடக்கில் சிங்கள மக்கள் குடியெற முடியாது என யாருக்கும் தெரிவிக்க முடியாது. 52வீதமான தமிழ் மக்கள் சிங்கள மக்களுடனே இணைந்து வாழ்கின்றனர். இனவாதம் பேசி மக்களை பிளவுபடுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »