Our Feeds


Thursday, June 9, 2022

ShortTalk

பசில் ராஜபக்ஷ MP பதவியை ராஜினாமா செய்வது ஏன்? - வெளியான முக்கிய தகவல்கள்.



ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கு முன்னாள் நிதியமைச்சரும் அக்கட்சியின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இன்றையதினம் (09) முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ள பசில் எம்.பி, தனது தீர்மானத்தை அறிவிப்பார் என்றும் தெரியவருகிறது.

தனது இராஜினாமா கடிதத்தை இன்று (09) அல்லது நாளை (10) பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பாராளுமன்றத்தை விட்டு வெளியேறியதன் பின்னர் கட்சி நடவடிக்கைகளில் முழுநேரமாக ஈடுபடுவதற்கு பசில் ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
 
பசில் ராஜபக்‌ஷ, தனது கட்சியின் நெருக்கமான குழுவொன்றுடன் நேற்று முன்தினம் இரவு (07) விசேட கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், தேசியப் பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அவர்களிடம் அறிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

பசில் ராஜபக்‌ஷவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாகவுள்ள தேசியப் பட்டியல் எம்.பி பதவிக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பதவிக்கு முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
 
அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் வெகுவிரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், இரட்டை பிரஜாவுரிமையை ​கொண்டிருக்கும் பசில் ராஜபக்‌ஷவின் எம்.பி பதவி பறிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவோ அல்லது எதிர்காலத் தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்ற சரத்து இந்தத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு பதவியிலிருந்து விலக்கப்படுவதற்கு  முன்னரே தனது பதவியை இராஜினாமா செய்வது உசிதமானது என பசில் ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் 21ஆவது திருத்தம் குறித்து பசில் கலந்துரையாடியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பஸில் பாராளுமன்றம் வந்தது தேசியப்பட்டியல் எம் பி ஜயந்த கெட்டகொட ராஜினாமா செயததை தொடர்ந்தே ஆனால் அஜிட் நிவாட் கப்ராலின் வெற்றிடத்துக்கு மீண்டும் பஸிலுக்காக பதவி துறந்த ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »