Our Feeds


Monday, July 4, 2022

SHAHNI RAMEES

பஸ்களில் பெண் நடத்துநர்களை பணிகளில் ஈடுபடுத்த திட்டம்...

 

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி, இந்திய அசோக் லேலன்ட் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, பயன்படுத்தாமல் உள்ள 100 பஸ்களை வாடகை அடிப்படையில் பெற்று பயன்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை வாகனங்களின் கட்டணங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பயன்படுத்தப்படும் பஸ்கள் பின்னர், இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பஸ்களில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, புதிதாக ஓட்டுநர்களை பணிகளில் சேர்த்துக்கொள்ளும் அதேநேரம் பெண் நடத்துநர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவர்களுக்கு பகல் போசனத்துக்கும் நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளது. முதலில் மாதிரி திட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டம், வரும் காலங்களில் காலி, மாத்தறை போன்ற இடங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என்று பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பயணிகளின் போக்குவரத்துக்காக 500 பஸ்களை அடுத்துவரும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனினும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரை எரிபொருட்களை விநியோகிக்கும் இயலுமை இல்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஊடக நிறுவனங்கள் செயற்படுவதற்கு தேவையான எரிபொருட்களை, அரச போக்குவரத்து சபையில் இருந்து பெற்றுக்கொள்ள வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு எரிபொருட்களை விநியோகிக்கும் அளவுக்கு எரிபொருட்கள் இல்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »