Our Feeds


Thursday, August 4, 2022

ShortTalk

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்வு ; வெள்ளத்தில் சிக்கிய நால்வர் தொடர்ந்தும் மாயம். - பாதிப்புகள் பற்றிய முழு தொகுப்பு!



(எம்.மனோசித்ரா)


நாட்டில் கடந்த இரு தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று புதன்கிழமை மாலை வரை 3191 குடும்பங்களைச் சேர்ந்த 12 819 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவிலும் , கண்டி மாவட்டத்தில் பஸ்பாகேகோரள பிரதேச செயலகப்பிரிவிலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர் நேற்றுமாலை வரை கண்டு பிடிக்கப்படவில்லை.


இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தறை, கேகாலை, மாத்தளை, காலி, அம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக அதிகளவான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. இம்மாவட்டங்களில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதோடு , 982 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இவற்றினால் பாதிக்கப்பட்ட 480 குடும்பங்களைச் சேர்ந்த 2313 பேர் 15 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இன்று வியாழக்கிழமை மத்திய மாகாணத்தின் நுவரெலியா, கொத்மலை மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் அறிவித்துள்ளார்.

இரத்தினபுரி

இரத்தினபுரி மாவட்டத்தில் 1788 குடும்பங்களைச் சேர்ந்த 6896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 537 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு , 71 குடும்பங்களைச் சேர்ந்த 386 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி

கண்டி மாவட்டத்தில் 827 குடும்பங்களைச் சேர்ந்த 3809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு , 323 குடும்பங்களைச் சேர்ந்த 1595 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா

நுவரெலியா மாவட்டத்தில் 443 குடும்பங்களைச் சேர்ந்த 1649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாகவும் 313 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இங்கு 86 குடும்பங்களைச் சேர்ந்த 332 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை

மாத்தறை மாவட்டத்தில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் 50 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கேகாலை

கேகாலை மாவட்டத்தில் 49 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 40 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மாத்தளை

மாத்தளை மாவட்டத்தில் ரத்தோட்டை பிரதேச செயலகப்பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் 9 வீடுகள் கடும் மழை காரணமாக பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டையில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கம்பஹா

கம்பஹா மாவட்டத்தில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

காலி, யாழ்ப்பாணம்

காலி மாவட்டத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் , யாழ் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

200 மி.மீ. மழை வீழ்ச்சி

நேற்று மாலை 6 மணிவரையான 24 மணித்தியாலங்களில் நுவரெலியா மாவட்டத்தின் கெனியன் பிரதேசத்தில் 212 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதே வேளை மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் , மாத்தறை மாவட்டத்திலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் , சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

காலி, அம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும்  இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »