Our Feeds


Thursday, August 4, 2022

ShortTalk

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பில் திடீரென குறைந்த 7 பில்லியன் டொலர்கள் - எவரும் தேடிப் பார்க்கவில்லை - உயர் நீதி மன்றில் வாதம்!(எம்.எப்.எம்.பஸீர்)


இரு வருடங்களுக்குள்,  நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில்  7 பில்லியன் டொலர்கள்  திடீரென குறைவடைந்த நிலையில், அது தொடர்பில் எவரும் தேடிப் பார்க்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர நேற்று (4)  உயர் நீதிமன்றில் சுட்டிக்காட்டி வாதங்களை முன் வைத்தார்.


நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்று (03) 2 ஆம் நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது அவர் இவ்வாதங்களை முன் வைத்தார்.

அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர்,  வௌிநாடு செல்ல உயர் நீதிமன்றம்  விதித்த  இடைக்கால தடை  எதிர்வரும் ஆகஸ்ட் 11 ஆம் திகதிவரை இதன்போது  நீடிக்கப்பட்டுள்ளது.

 இதனைவிட பிரதிவாதிகளான   மத்திய வங்கி முன்னாள் ஆளுநர்களான பேராசிரியர் டப்ளியூ. டி. லக்ஷ்மன், அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலர் எஸ். ஆர். ஆட்டிகல  ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லப் போவதில்லை என நீதிமன்றுக்கு உறுதியளித்துள்ள நிலையில், அந்த உறுதிப் பாடும் எதிர்வரும் ஆகஸ்ட் 11 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, , விஜித் மலல்கொட மற்றும்  எல்.ரி.பி. தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று முற்பகல் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது இவ்வாறு பயணத் தடை நீடிக்கப்பட்டது.

 இன்றைய தினம் மனுதாரர்களான இலங்கை வர்த்தகப்பேரவையின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி  சந்தக ஜயசுந்தர 2 ஆவது நாளாகவும் வாதங்களை முன் வைத்தார்.

 நாடு வங்குரோத்து நிலையை நோக்கி சென்றுகொண்டிருந்த போது, அச்சமயம் மத்திய வங்கி ஆளுநராக இருந்த அஜித் நிவாட் கப்ரால்  உண்மையான நிலைமையை மறைத்து நிலைமை சுமுகமாக இருப்பதாக  பொது மக்களை ஏமாற்றும் வண்ணம்  நடந்துகொண்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர குற்றம் சுமத்தினார்.

 கடந்த 2022 மார்ச் மாதம் இறுதியாகும் போது நாட்டில்  இரு வாரங்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான  வெளிநாட்டு கையிருப்பே இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

 இம்மனுக்கள் தொடர்பில் அஜித் நிவாட் கப்ரால் தாக்கல் செய்துள்ள  ஆட்சேபனைகளை பார்க்கும் போது,  நாட்டில் இத்தனை அழிவுகள் நடந்தும்  நாட்டின்  நிலைமையை  அவர் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை என்றே தோன்றுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர தெரிவித்தார்.

 இரசாயன உரப் பாவனையை தடை செய்தமை,  சேதனப் பசளை பயன்பாட்டை ஊக்குவிக்கும்  வேலைத் திட்டங்களை  நாட்டின் பொருளாதார  நிலைமை வீழ்ச்சியடையும் சந்தர்ப்பத்தில் அமுல் செய்ய எத்தனித்தமை  எந்த வகையிலும்  அடிப்படையற்ற வெறுமனே அரசியல்  கொள்கை சார் தீர்மானம் என  அவர் சுட்டிக்காட்டினார்.

 பிரதிவாதிகளின்  தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளால் நாடு இன்று வங்கோரோத்து நிலையை அடைந்து, அதன் விபரீதங்களை பொது மக்கள் அனுபவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 இரு வருடங்களுக்குள்,  நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில்  7 பில்லியன் டொலர்கள்  குறைந்துள்ளதாகவும், இது  690 சதவீத குறைவு எனவும்  குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர , நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு திடீரென குறைந்தது எப்படி என கேள்வி எழுப்பினார்.  அது தொடர்பில் எவரும் தேடிப் பார்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

 தவறான நிதிப் பயன்பாடு, கடன் மறுசீரமைப்புக்கு செல்லாமை,  சர்வதேச நாணய நிதியத்தை நாடாமை,  போன்ற பிரதிவாதிகளின் பொறுப்பற்ற , தான்தோன்றித்தனமான  தீர்மானங்கள் காரணமாக  நாடு வங்கரோத்து நிலையை அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

 அதன் பின்னர் கலாநிதி மஹிம் மென்டிஸ் உள்ளிட்டோர்   தாக்கல் செய்த மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய வாதங்களை முன் வைத்தார்.

 உலகின் மிளிர்ந்த ஒரு நாடான இலங்கையை தற்போது உலகம் பொருளாதார வங்குரோத்து நிலைமைக்கு உதாரணமாக காண்பித்து வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய உயர் நீதிமன்றில் சுட்டிக்காட்டி வாதங்களை தொடர்ந்தார்.  அதிகாரிகளும்  அதிகார வர்க்கத்தினரும் தமது தனிப்பட்ட சவால்களை வெற்றி கொள்வதை விடுத்து எப்போதும் பொது மக்கள் நலன் தொடர்பில் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய,  வரி நீக்கமானது அமைச்சரவை எடுத்த மிக மோசமான முட்டாள்தனமான தீர்மானம் என குறிப்பிட்டார்.

 இதனையடுத்து இம்மனுக்கள் தொடர்பிலான மேலதிக  பரிசீலனைகள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

மூன்று பல்கலைக்கழக புத்திஜீவிகள், இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரரும் பயிற்றுவிப்பாளருமான ஜுலியன் பொல்லிங், இலங்கை வர்த்தகப்பேரவையின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு மற்றும் ஜெஹான் கனக ரத்ன ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் சீரற்ற நிதி நிர்வாகம் ஆகியவற்றுக்கான முக்கிய பொறுப்பாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அம்மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

 மேற்குறிப்பிட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த கலாநிதி அத்துலசிறி குமார சமரகோன், புத்திஜீவிகளான சூசையப்பு நேவிஸ் மொறாயஸ் மற்றும் கலாநிதி மஹிம் மென்டிஸ் ஆகியோர் தமது மனுக்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் டபிள்யூ.டி.லக்ஷ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட 39 பேரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டிருந்தனர். தற்போது ரணில் விக்கிரமசிங்க பிரதிவாதி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதிவாதி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.

 கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக  பதவியேற்றதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வரிக்குறைப்புக்களே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்குப் பிரதான காரணமென மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மக்களால் செலுத்தப்படும் வரிகளைக் குறைப்பதற்குத் தன்னிச்சையான தீர்மானத்தை மேற்கொண்டார் என்றும், இத்தீர்மானம் முற்றுமுழுதாக அரசியல் ரீதியான நகர்வென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் கணக்காய்வாளர் நாயகம் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் கொடுக்கல், வாங்கல்களைக் கணக்காய்விற்கு உட்படுத்தி மத்திய வங்கிக்கு ஏற்பட்டிருக்கும் நட்டத்தை மதிப்பீடு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மற்றும்ஜனாதிபதி சட்டத்தரணி  சந்தக ஜயசுந்தர ஆகியோரும் சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நரின் புள்ளேவும் ஆஜராகின்றனர். முன்னாள் பிரதமர் மஹிந்த மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன ஆஜராகின்றமை குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »