Our Feeds


Friday, August 19, 2022

SHAHNI RAMEES

மஹிந்தவை போன்றே ரணிலும் நிராயுதபாணிகளை தாக்குகிறார் - சரத் பொன்சேகா




அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று

(18) போராட்டம் ஒன்றை நடத்தியது.


கொழும்பில் இடம்பெற்ற இந்த போராட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், சுமார் 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பல்கலைக்கழகங்களை உடனடியாகத் திறக்குமாறும், மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் வழங்குமாறும் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.


எவ்வாறாயினும், போராட்டத்தை தாக்கி கலைத்தமை மிகவும் ஜனநாயக விரோத செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


இது, குறித்து தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.


அதில், "நிராயுதபாணியான பல்கலைக்கழக மாணவர்களின் அமைதி போராட்டத்தை தாக்கி விரட்டுவதற்கு ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய காவல்துறை மற்றும் அதிரடிப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டமையானது ஒரு நாட்டில் ஜனநாயகம் ஆட்சி இல்லை என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


கடந்த மே 9 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைதியான மற்றும் அகிம்சை வழியிலான போராட்டத்தின் மீது இவ்வாறான கும்பலைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினார்.


இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் ஆயுதமேந்திய காவல்துறை மற்றும் இராணுவப் பிரிவுகளை களமிறக்குகின்றார்.


மே 9 தாக்குதலுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை முழு நாடும் பார்த்தது.  இவ்வாறான செயற்பாடுகளால் இன்னும் தீவிரமான மக்கள் எழுச்சிக்குத் தேவையான வழியை உருவாக்குகிறார்கள் என்பதை ஆட்சியாளாகள் புரிந்து கொள்ள வேண்டும்.


மக்களிடம் இருந்து எழும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு காவல்துறையையும் இராணுவத்தையும் பயன்படுத்துவதை ஜனநாயக உலகம் ஒருபோதும் அங்கீகரிக்காது.


சர்வதேச ஆதரவு இன்றியமையாத இந்த நேரத்தில், இதுபோன்ற தேவையற்ற அடக்குமுறை, சந்தேகத்திற்கு இடமின்றி முழு நாட்டையும் ஒடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »