Our Feeds


Thursday, August 18, 2022

SHAHNI RAMEES

கோட்டாவை தொடர்ந்து அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்ள மக்கள் முட்டாள்கள் அல்லர்! -உதயங்க வீரதுங்க

 



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும் ராஜபக்க்ஷ குடும்பத்தின் மிக நெருக்கமான ஒருவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

தான் கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுவதாகவும் இதன்போது அவர் இதனை தன்னிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்ட அவர், ஏதேனும் சூழ் நிலையில் அத்திகதியை அவர் மாற்றுவாரா என தனக்கு தெரியாது என குறிப்பிட்டார்.

2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு மிக் 27 ரக போர் விமாங்கள் நான்கினை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமானங்கள் நான்கை மீள திருத்தும் போதும் இடம்பெற்ற 7 பில்லியன் ரூபா மோசடிகள் குறித்து கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் வாக்கு மூலம் ஒன்றைபெற கோட்டை நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.



அதன்படி அவ்வாக்கு மூலத்தை வழங்க அவர் சிஐடியில் நேற்று ( 17) ஆஜரானார்.
சிஐடியில் வாக்கு மூலம் வழங்கிவிட்டு வெளியேறுகையிலேயே அவர் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பும் தகவலை வெளியிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த உதயங்க வீரதுங்க, ‘ கோட்டாபய திறமையான ஒரு அதிகாரி. எனினும் திறமையான அரசியல்வாதி அல்ல. அவ்வாறான ஒருவரை தொடர்ந்து அரசியலில் ஏற்க மக்கள் முட்டாள்கள் அல்ல.
என்னைப்போல அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் பலர் உள்ளனர்.

அவர்கள் எவருக்கும் கோட்டாபய நியாயத்தை பெற்றுத் தரவில்லை. கோட்டா அவரது ஆரம்பத்தை மறந்துவிட்டார். அவரது சகோதரரையும் மறந்து விட்டார்.
இலங்கைக்கு அவசரமாக வருமாறே நான் கோட்டாவிடம் கூறினேன். இங்குள்ள மக்கள் அவரை பழிவாங்கப் போவதில்லை. அவரை நல்ல முறையில் பார்த்துக் கொள்வர்.’ என இதன்போது கருத்து வெளியிட்ட உதயங்க வீரதுங்க குறிப்பிட்டார்.

கடந்த ஜூலை 9 ஆம் திகதி மக்கள் போராட்டத்தைஅ டுத்து மாலை தீவுக்கு தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அங்கிருந்து சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரிலிருந்து தற்போது தாய்லாந்துக்கும் மாறி பயணித்து தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »