விசா இரத்துச் செய்யப்பட்டுள்ள பிரித்தானிய பிரஜையான
கெய்லி பிரேஸரை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.தற்போது அவர் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்தமைக்காக, குறித்த பெண்ணின் விசா இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறுமாறும் குடிவரவு திணைக்களம் அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடுமாறு கோரி கெய்லி பிரேஸர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் அதனை நிராகரிக்க நடவடிக்கை எடுத்தது.
அதற்கமைய, அவர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார் என அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அவர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த யுவதி தற்போது சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியுள்ளதாகவும், அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
