Our Feeds


Wednesday, August 17, 2022

SHAHNI RAMEES

இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை..!

 

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அறிக்கையொன்று, இலங்கை அடிமைத்தனத்தை ஒழிக்கத் தவறியுள்ளதாகக் கண்டறிந்துள்ளது. இதில் பெருந்தோட்டத் துறை, ஆடை உற்பத்தி ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அப்பாற்பட்டு போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக வீட்டுப் பணியாளர்களாகவும் பணிப்பெண்களாகவும் பணிபுரியும் வறுமையில் வாடுபவர்கள் வரை பல மட்டங்களில் பரவலாக காணப்படுகின்றது.

12 செப்டம்பர் முதல் ஒக்டோபர் 7 வரையிலான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஐம்பத்தோராவது கூட்டத்தொடருக்காக, அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள், அதன் காரணங்கள் மற்றும் விளைவுகள் உள்ளிட்ட விடயங்களுக்கான விசேட அறிக்கையாளர்  டொமோயா ஒபோகாட்டா, அளித்த அறிக்கையில், “சிறுவர் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்ட மற்றும் பிற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அதன் மோசமான வடிவங்கள் உட்பட, அது இன்னும் இலங்கையில் நீடிக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு காரணங்களை முன்வைத்து சர்வதேச நிதியுதவி/நன்கொடை நிறுவனங்கள் தங்களது நிதியுதவியை நிறுத்திவைத்துள்ள நிலையில், இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் வேளையில் ஐ.நாவின் இந்த வலுவான கருத்து வெளியாகியுள்ளது.

தீவிரமான சமூகப் பிரச்சினைகள் “குறிப்பாக மலையகத் தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் போன்ற சிறுபான்மையினர் வசிக்கும் ஏழ்மையான கிராமப்புறங்களில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர். அங்கு சில சிறுவர்கள், குறிப்பாக சிறுமிகள் தங்கள் குடும்பத்திற்கு உதவுவதற்காக படிப்பை கைவிட்டு பாடசாலையிலிருந்து  வெளியேறும் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. உதாரணமாக, பெருந்தோட்டத் துறையில், மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அபாயம் அதிகமாக உள்ளது, பெரும்பாலும் தரமற்ற கல்வி மற்றும் வசதிகள் குறைபாடும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.” என ஐ.நா.வுக்கு அவர் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஜப்பானிய அறிஞரான டொமோயா ஒபோகாட்டா , நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், மனித கடத்தல் மற்றும் நவீன அடிமைத்தனம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற அவர் தனது அறிக்கையில், சுற்றுலாத் துறையில் சிறுவர்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதாகவும் “இது கவலையளிக்கிறது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அதிக அந்நியச் செலாவணியை ஈட்டும் தொழில்கள் இரண்டு – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஆடை உற்பத்தி ஆகியன ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரின் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளன. இந்த இரண்டு துறைகளிலும் இதர துறைகளை தவிர வெவ்வேறு வடிவங்களில் அடிமைத்தனம் பரவலாக இருப்பதை அவரது அறிக்கை கண்டறிந்துள்ளது.

அவரது அறிக்கை்கு அமைய “கட்டாய திருமணம் என்பது அடிமைத்தனத்தின் ஒரு சமகால வடிவமாகும், மேலும் இலங்கையின் சூழலில், பொதுவாக வறுமை, பாடசாலை இடைவிலகல், இளமைக்கால கர்ப்பம் மற்றும் பிற காரணிகள் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.” பெருந்தோட்டத் துறை அடிமைத்தனத்திற்கு ஒரு தெளிவான உதாரணம் என அவரது அறிக்கை சாடியுள்ளது. “இலங்கையில் தற்கால அடிமைத்தனத்தால் பெண்களும் சிறுமிகளும் ஒப்பீட்டளவிலான விகிதாசாரத்தில் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்”.

“இராணுவ பாணியிலான செயற்பாடும் டோமோயா ஒபோகாட்டாவிடமிருந்து கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. தேயிலைத் தோட்டங்கள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகள் போன்ற தனியார் வணிகங்களில் இராணுவ அதிகாரிகளை பணியமர்த்துவது பற்றி குறிப்பிடுகையில், “நிர்வாகத்தின் தலைமை உட்பட, அதில் இராணுவ ரீதியிலான கட்டுப்பாட்டைத் திணிப்பது கவலை அளிக்கிறது” என அவர் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, இது தொழிலாளர்கள் மத்தியில் அச்ச சூழ்நிலையுடன் கூடிய  கலாச்சாரத்தை உருவாக்க வழிவகுக்கிறது. “சில ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் தொழிலாளர்களை அச்சுறுத்தியமை, துன்புறுத்துதியமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உட்பட சில சம்பவங்கள் குறித்து ஐ நா வின் சிறப்பு அதிகாரியான டொமாட்டோவிற்கு தெரியப்படுத்தப்பட்டது”.

சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடைத் தொழில் துறையில் பணிபுரிபவர்களின் அவலநிலை, ஐ.நா அறிக்கைக்கு அமைய, பணியிட துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் போன்றவற்றில் எவ்வகையிலும் குறைந்து காணப்படவில்லை.

ஐ.நா.வின் அடுத்த அமர்வில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ள ஒபோகாட்டா, மலையகத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் “உடல், வாய்மொழி மற்றும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற அதிக அளவிலான சுரண்டல் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

நாட்டில் காணப்படும் பரந்துபட்ட கொத்தடிமை தனத்திற்கு மொழித் தடை மற்றும் இனப் பரிமாணம், நுண் கடனுதவியின் தீய வட்டமும் அதன் மரணப் பொறியும் போன்றவையும் காரணிகளாக உள்ளன என்பவை அவரது அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. கடனுக்கான அதிக வட்டி விகிதங்கள் காரணமாக, பல பெண்கள் கடனை செலுத்த முடியாமல் கொத்தடிமைகளாக மாறியுள்ளனர்,  இது அண்மைய ஆண்டுகளில் 200ற்கும் மேற்பட்ட பெண்களின் தற்கொலைக்கு வழிவகுத்தது என அவரது அறிக்கை கூறுகிறது.

பரவலான வறுமையால் பாதிக்கப்படக்கூடிய பெண்களை பாலியல் வேலைக்குத் தள்ளப்படுவதும் அவரது அறிக்கையில் இடம் பெறுகிறது.

வர்த்தகங்கள் மற்றும் முதலாளிகள், சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் மற்றும் பிற பிராந்திய மற்றும் சர்வதேச பங்குதாரர்கள், அத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களுடனும் பணியாற்றுமாறு விசேட அறிக்கையாளர் இலங்கையை ஊக்குவிக்கும் அதேவேளையில் அவர் “சிவில் சமூகத்தினரின் குரலுக்கான இடம் குன்றியுள்ளது ஆழமான ஒரு பிரச்சனையாகத் தோன்றுகிறது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில், தற்கால அடிமை முறைகள் இனப் பரிமாணத்தைக் கொண்டிருக்கின்றன, அத்துடன் பிரச்சனைகளை எடுத்துக் கூறி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள மொழித் தடையும் முக்கியமான காரணிகளாக தொடருகின்றன ஐ நா வின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாட்டா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »