Our Feeds


Wednesday, August 3, 2022

ShortTalk

சீன உளவு கப்பலை உள்ளே விடாதீர்! - கூட்டமைப்பு வலியுறுத்து



இலங்கை பொருளாதார ரீதியாக நலிவடைந்து மக்களுடைய அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக இலங்கை அரசாங்கம் செயல்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


மன்னாரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கின்றது.


சீனாவின் உளவு பார்க்கும் கப்பல் இலங்கை நோக்கி வருவதை இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் உடனடியாக நிறுத்த வேண்டும். எங்களைப் பொறுத்தமட்டில் இந்தியாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை வருமாக இருந்தால் அதனை அனுமதிக்க முடியாது.


இந்திய மீனவர்களின் வருகை என்பது கவலையான விடயமாக இருந்தாலும் தமிழ் பேசும் சமூகமாகிய நாங்கள் இந்தியாவை ஒருபோதும் கைவிட முடியாது.


அண்மையில் சீனாவினுடைய தூதுவர் இங்கு வந்து ஒரு சர்ச்சையை கிளப்பி சென்ற பின்னணியில் பல எதிர்ப்புகளை எமது மக்கள் காட்டியிருந்தார்கள்.


ஆகவே, இலங்கை அரசாங்கம் ராஜாதந்திர நடவடிக்கையாக இரண்டு நாடுகளையும் சாதகமாக வைத்திருக்க வேண்டும் என்றால் இந்தியாவை பகைக்க கூடாது என்பது எமது கருத்தாகும்.

பொருளாதார ரீதியில் விழுந்து கிடக்கின்ற இலங்கைக்கு இந்திய பல உதவிகளை அண்மைக்காலமாக செய்து வருகிறது.


எமது தமிழர்களை பொருத்தமட்டில் இந்தியா தான் எமக்கான தீர்வை பெற்று தரக்கூடியதும் எங்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய வல்லமை பொருந்தியதாக இருக்கிறது.


இந்த நிலையில், சீனாவின் வேவு பார்க்கும் கப்பல் வருகையை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.இல்லையெனில் இந்தியா இலங்கையை விட்டு அதிக தூரம் செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.


இந்தியாவை பகைப்பதால் இலங்கைக்கு ஒருபோதும் நன்மை கிடைக்காது. அதை தமிழர்களாகிய நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் முடியாது.- என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »