Our Feeds


Thursday, August 4, 2022

ShortTalk

கோட்டா மீது சர்வதேச மட்டத்தில் தொடரும் குற்றச்சாட்டுக்கள்.



(நா.தனுஜா)


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகின்ற முக்கிய பொறுப்புக்களை வகித்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, எனவே தாம் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்திருக்கும் குற்றவியல் முறைப்பாட்டில் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு அப்பால் பாரிய ஊழல், மோசடிகள் உள்ளடங்கலாக நாட்டின் தற்போதைய நிலைக்குக் காரணமான பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களும் உள்ளடக்கப் பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்யுமாறு வலியறுத்தி சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றவியல் முறைப்பாட்டு ஆவணம் தொடர்பில் பிரிட்டனைத் தளமாகக்கொண்டியங்கும் வானொலி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே யஸ்மின் சூக்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்நேர்காணலில் அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல் குற்றங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தொடர்பு குறித்த ஆவணங்கள், ஆதாரங்கள் நாம் சமர்ப்பித்திருக்கும் குற்றவியல் முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் சட்டத்தின் பிரகாரம் சர்வதேச சட்ட அதிகாரவரம்பின்கீழ் இதுகுறித்து அந்நாட்டிலேயே விசாரணைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமக்கள் மீதும் வைத்தியசாலைகளின் மீதும் தாக்குதல்களை நடத்துவதற்குக் கட்டளை பிறப்பித்தமை, மக்களை பட்டினியில் வாடச்செய்தமை, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் சென்றடைவதில் தடையேற்படுத்தியமை, யுத்த சூனிய வலயத்தில் தாக்குதல் நடத்துவதற்குக் கட்டளையிட்டமை உள்ளடங்கலாக மனிதகுலத்திற்கு எதிரான பல குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியவராக இருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி கடந்த 1989 ஆம் ஆண்டில் ஜே.வி.பி எழுச்சி மற்றும் கலவரங்களின்போது மாத்தளை மாவட்டத்திற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, அக்காலப்பகுதியில் இடம்பெற்ற பெருமளவான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருக்கின்றார். 

மனித உரிமை மீறல்கள் ஒருபுறமிருக்க கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவே பாதுகாப்புச்செயலாளராக செயற்பட்டார்.

அதுமாத்திரமன்றி அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய முக்கிய பொறுப்புக்களை வகித்தனர். அதனைத்தொடர்ந்து 2015 - 2019 வரையான காலப்பகுதியில் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சியதிகாரத்தை இழந்த போதிலும், மீண்டும் 2019 ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவானதைத் தொடர்ந்து பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மீண்டும் அவர்களின் கைகளுக்குச் சென்றது.

அதன்படி மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு அப்பால் பாரிய ஊழல், மோசடிகள் உள்ளடங்கலாக நாட்டின் தற்போதைய நிலைக்குக் காரணமான பொருளாதாரக்குற்றங்கள் தொடர்பான ஆவணங்களும் எமது முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »