Our Feeds


Thursday, September 1, 2022

ShortTalk

ஸஹ்ரான் - சாரா புலஸ்தினிக்கிடையிலான தொடர்பு - ஸஹ்ரானின் மனைவி மீது குற்றச்சாட்டு!



(பாறுக் ஷிஹான்)


உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின்  மனைவிக்கு எதிராக வழக்கு  விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை பொலிஸாரினால் எழுப்பப்பட்ட நிலையில் எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



இது குறித்த வழக்கு   கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு  நேற்று வந்தபோதே  இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி வழக்கானது நேற்று விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை  பிரதிவாதி ஸஹ்ரானின் மனைவி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப், முஹமட் அக்ரம் உட்பட சட்டத்தரணி சலாகுதீன் சப்றீன் மூவரும் ஆஜராகி இருந்தனர்.

விசாரணையின் போது மன்றில்  குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஸஹ்ரானின் மனைவியினால் ஏற்கனவே வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டிருந்தது.

மேலும் ஸஹ்ரான் மற்றும் தப்பிச் சென்றதாக கூறப்புடும் புலஸ்தினி ஆகியோருக்கிடையிலான உறவு தொடர்பில் மறைத்தமை தொடர்பாக  ஸஹ்ரானின் மனைவிற்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன் குற்றப்புலனாய்வு பிரிவானது மனைவியிடம் 4 வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நான்கு வாக்குமூலங்களும் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் கேள்விகளை பொலிஸார் மன்றில் எழுப்பியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனையடுத்து மீண்டும்   நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால்  எதிர்வரும் செப்டம்பர்  மாதம் 30 திகதிக்கு  குறித்த வழக்கு மறு தவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது  பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இது தவிர கடந்த கால வழக்கு தவணைகளின் போது   குற்றப்பத்திரத்தின் இணைப்பு ஆவணங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் அவை தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்படல் வேண்டும் எனவும்  அப்போதே பிரதிவாதிக்கு தன் பக்க நியாயங்களை முன்வைக்க முடியுமாக இருக்கும் எனவும் ஹாதியாவின் சட்டத்தரணியினால் சுட்டிக்காட்டப்படிருந்தது.

அதன்படி கடந்த தவணையில் நீதிமன்றம்  பிரதிவாதியான ஸஹ்ரானின் மனைவிற்கு  எதிரான குற்றப்பத்திரத்தின் இணைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளை   வழக்கு விசாரணையின்போது அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனால்  பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »