Our Feeds


Saturday, September 24, 2022

ShortTalk

சவூதியில் அடுத்த ஆச்சரியம் | மதீனா நகரின் கீழ் பெருமளவான தங்கமும், தாமிரமும் புதைந்து கிடப்பது கண்டுபிடிப்பு



சவூதி அரேபியாவில் உள்ள புனித நகரான மதீனாவில் பெருமளவிலான தங்கமும், தாமிரமும் புதைந்து கிடப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் புவியியல் ஆய்வுத்துறை அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக சவூதி அரேபிய புவியியல் ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள ட்டுவீட்டில், மதீனாவில் உள்ள அபா அல் ரஹா பகுதியில் தங்கப் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல அல் மதிக், வாதி அல் பரா பகுதிகளில் தாமிரப் பதிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதன் காரணமாக சவூதியில் மேலும் பல்வேறு உலகளாவிய முதலீடுகள் குவிய வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.


புதிய தங்கம் மற்றும் தாமிரப் படிவுகள் காரணமாக சவூதி அரேபியாவின் தேசியப் பொருளாதாரம் கிடுகிடுவென அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இதை வைத்து பல்வேறு முதலீடுகளையும் ஈர்க்க சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 533 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் கிடைக்கும் என்றும் 4000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.


தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் சவூதிக்கு இந்த தங்கம் கண்டுபிடிப்பு புதிய அந்தஸ்தை ஏற்படுத்தித் தரும். சவூதி அரேபியாவில் ஏற்கனவே 5300க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் உள்ளன. பல்வேறு உலோகங்கள், கணிம சுரங்கங்கள், ஜெம் பாறைகள், கிரானைட் உள்ளிட்டவை இதில் அடக்கம்.


2030ம் ஆண்டுக்குள் சுரங்கப் பிரிவை மேலும் விஸ்தரிக்க ஏற்கனவே சவூதி அரேபியா திட்டமிட்டிருந்தது. இதுதொடர்பாக அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் பல்வேறு திட்டங்களையும் தீட்டி செயல்பட்டு வருகிறார். சுரங்கங்கள் தொடர்பான ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறைக்கு முன்னுரிமை கொடுக்கவும் அவர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது தங்கமும், தாமிரமும் கண்டறியப்பட்டுள்ளது அந்த நாட்டு அரசுக்கு உத்வேகம் கொடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »