பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கி, தங்கை நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் பேராதனை, பிலிமத்தலாவ மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஐவரில் இருவர் பெண்களாவர்.
தலவத்துகொட பகுதியில் உள்ள வீடொன்றை வாடகைக்கு வாங்கும் போர்வையில் வீடொன்றிற்குள் நுழைந்த சந்தேகநபர்கள், அங்கிருந்த பெண்ணை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி, தாக்கி காயப்படுத்தி, தூக்க மாத்திரைகளை விழுங்கச் செய்து, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களால் களவாடப்பட்ட நகைகளில் ஒரு பகுதி மருதானையிலும் மற்றுமொரு பகுதி பேராதனையிலும் அடகு வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.