Our Feeds


Monday, September 12, 2022

SHAHNI RAMEES

நிலைமை மோசமாகும்: எச்சரிக்கை விடுப்பு


 இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என்றும் போதுமான உயிர்காக்கும் உதவி மற்றும் வாழ்வாதார ஆதரவு வழங்கப்படாவிட்டால் அவர்களின் நிலைமை மோசமடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் ஆகியவை இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தொடர்ச்சியான இரண்டு பருவங்களில் மோசமான அறுவடை காரணமாக உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத வீழ்ச்சிக்கு வழிவகுத்தாகவும் அந்நியச் செலாவணிக் கட்டுப்பாடுகள் காரணமாக உணவு தானியங்களின் இறக்குமதி குறைக்கப்பட்டதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.


உடனடி உணவு உதவி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் உட்பட குடும்பங்களுக்கு போஷாக்குள்ள உணவை வழங்குவது முக்கியமானது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடைவதைத் தடுக்கவும் விவசாய உற்பத்தியை மீட்டெடுப்பதற்கும், சிறு விவசாயிகளை இலக்காகக் கொண்ட வாழ்வாதார உதவிகள் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


60 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்கள் குறைவாகவே உணவு உண்பதுடன்,  மலிவான மற்றும் குறைந்த போஷாக்குள்ள உணவை உட்கொள்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட பாதிக்கப்படக்கூடிய மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு உணவு அல்லது பண அடிப்படையிலான உதவிகளை வழங்க வேண்டும் என்று இரு அமைப்புகளும் பரிந்துரைத்துள்ளன.


மேலும், விவசாயத்துக்கு தேவையான உரங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களை வழங்கி அவர்களின் போஷாக்கு நிலையை மேம்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »