Our Feeds


Thursday, September 1, 2022

ShortTalk

விபத்தில் உயிரிழந்த காத்தான்குடியைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலை மாணவி அஸ்பாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



(பாறுக் ஷிஹான்)


விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நேற்று (31) காலை இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடிளைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்திருந்தார்.

பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதுண்டு ஸ்தலத்தில் மரணமடைந்ததுடன் அவரது கணவர் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2 ஆம் வருட மாணவியான காத்தான்குடியைச் சேர்ந்த 22 வயதுடைய அக்பர் அலி பாத்திமா அஸ்பா என்பவரே உயிரிழந்தவராவார்.

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் உத்தரவில் பிரகாரம் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்துக்குச் சென்று மரண விசாரணையை மேற்கொண்டார்.

பின்னர் சடலமாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவியின் சடலத்தை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் கட்டளையிட்டார்.

மேலும் குறித்த விபத்தில் பல்கலைக்கழக மாணவியின் தலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில் இம்மரணம் சம்பவித்துள்ளது என பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »