Our Feeds


Thursday, October 6, 2022

SHAHNI RAMEES

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு நன்மைகள் ஏற்படும் – ரணில்.

 



சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக

உடன்படிக்கையை கடந்த காலங்களில் உரிய முறையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் அதனை முறையாக நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இந்த உடன்படிக்கை தென்கிழக்காசியாவுடனான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


இலங்கையில் முதலீடுகளை விஸ்தரிப்பதற்கு ஜப்பான் ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி என்பன ஆதரவை வழங்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


மேலும் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்திருப்பது நல்ல அறிகுறி என்று கூறிய ஜனாதிபதி, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளால் ஜப்பானுடனான நட்புறவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


சீனாவுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் இருந்து சீனா எமது நாட்டுக்கு ஆதரவளித்து வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.


இந்தியாவுடனான கலந்துரையாடலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் ஆதரவு எப்போதும் எமது நாட்டுக்கு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற கடன் வழங்கும் நாடுகளுடன் கூடிய விரைவில் ஒப்பந்தம் செய்துகொள்ள இலங்கை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


மேலும் சர்வதேச நாணயநிதியத்தின் உத்தரவாதத்தின் பின் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »