Our Feeds


Sunday, November 20, 2022

ShortTalk

வடக்கே போன ஜனாதிபதி மலையகத்துக்கு வந்து என்ன சொல்ல போகிறார் என்பதை எதிர்பார்கிறேன் - மனோ கணேசன்



“இப்போது வடக்கிற்கு போவதை போல், மலையகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளேன். அங்கே வாருங்கள் சந்திப்போம்”, என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் நேரடியாக கூறினார். 


வடகிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களது, பிரதான தலைமை கட்சியான எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்பீக்கள் உங்களை கட்டாயம் சந்திப்பார்கள் என்று நான் அவருக்கு பதிலளித்தேன். 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும்  கூறியதாவது, 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐநா சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.


வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகளின் "தள வேறுபாடு" களை இன்று ஐக்கிய நாடுகள் சபையே புரிந்துக்கொண்டு எம்முடன் தனியாக பேசுகிறது. 


இதை ஜனாதிபதியும் புரிந்துக்கொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி விட்டேன்.  


ஆகவே வடகிழக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மலையக தமிழ் மக்கள் தொடர்பில், பிரதான தலைமை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயமாக சாதகமாக நடந்துக்கொள்ளும்.


வடக்கில் ஜனாதிபதி  செயலக உப காரியாலயம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். நல்லது. 


காணி, வீடமைப்பு, சுகாதாரம் தொடர்புகளில் பல்வேறு குழுக்களை அமைக்க போவதாக அறிவித்துள்ளார். இதுவும் நல்லதே. 


ஆனால், இவை நடைமுறையாகி நல்லது  நடக்குமானால் மாத்திரமே அங்கு வாழும் அப்பாவி தமிழ் உடன்பிறப்புகள் மகிழ்ச்சியடைவார்கள்.  நானும் மகிழ்ச்சியடைவேன். 


மலையகத்தில்  ஜனாதிபதி ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. 


ஏற்கனவே, ஐநா சபை பெருந்தோட்டபுறங்களில் உணவின்மை 43 விகிதம் எனவும், உலக வங்கி பெருந்தோட்டபுறங்களில் வறுமை 53 விகிதம் எனவும் கூறி உள்ளன. 


ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபொகடா, பெருந்தோட்டபுறங்களில் நவீன கொத்தடிமை முறைமை இருப்பதாகவும், அதுவும் தொழிலாளர் என்ற காரணத்தை தாண்டி, சிறுபான்மை தமிழர் என்பதால் நிகழ்கிறது எனவும் அறிக்கை சமர்பித்து கூறி விட்டார். 


ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 


அதுதான் துன்புறும்  பெருந்தோட்ட மக்களை திருப்தியடைய செய்யும். 


200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய  நிலைமை பற்றி சர்வதேச சமூகம் சொல்லுவதை கேட்டு நம்நாட்டு  ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புதான் கேட்க வேண்டும். 


அதை செய்யாவிட்டாலும், இனி விசேட உணவு வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டு திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும் என கோருகிறேன்.  


பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு உதவ தாம் தயார் என ஐநா சபை என்னிடம் கூறியுள்ளது. அவரிடமும் கூறி இருப்பார்கள். 


ஐநா, மற்றும் இந்திய நாட்டு உதவிகளை கோரி பெற்று பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகளை முதலில் கவனியுங்கள்.   

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »