Our Feeds


Sunday, November 6, 2022

News Editor

வரவு,செலவுத்திட்டத்தை முடிந்தால் தோற்கடியுங்கள் ?


 

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உரையாற்றப்படவுள்ளது. தொடர்ந்து மறுநாள் நவம்பர் 15ஆம் திகதி விவாதிக்கப்பட்டு இதன்மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டத்தை தோற்கடிப்போம் என்று பொதுஜன பெரமுன கட்சியை சார்ந்த ஒரு தரப்பினரும் மக்களை பாதிக்கும் வரிவிதிப்புக்கள் இடம்பெறுமாயின் ஆதரவு தரமாட்டோமென ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்களை ஓரங்கட்டும் முகமாக 22ஆவது திருத்தத்ததை நிறைவேற்ற துணைபோனவர்களுக்கு ஆதரவு தரமாட்டோமென இன்னொரு தரப்பினருமாக எதிர்ப்புக் காட்டிவரும் நிலையில் வரவு,செலவுத்திட்டத்தை பாராளுமன்ற ஆதரவைப்பெற்று ஜனாதிபதி ரணில் எவ்வாறு நிறைவேற்றப்போகிறார் என்பது அக்கினிப் பரீட்சையாக மாறப்போகிறது. 

இதனைவிடவும் மஹிந்த ராஜபக்ஷவை வரவு, செலவுத்திட்டத்துக்கு முன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்க தவறும் பட்சத்தில் வரவு, செலவுத்திட்டத்தை தோற்கடிக்கப்போவதாக பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் எச்சரித்துள்ளமையும் முக்கியமான விடயமாகும். 

ஏலவே அரசியல் அமைப்பின் 22ஆவது சிர்திருத்தத்தை தோற்கடிப்போம் என்று கங்கணம் கட்டிய குழுவினரே வரவு, செலவுத்திட்டத்தை தோற்கடிக்கப்போகிறோமென்று சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த அணியினரைப் பொறுத்தவரை யாரோ சிலரால் ஏவிவிடப்பட்ட அம்புகளாகவே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

மஹிந்த ராஜபக்ஷவை பிரமராக மீண்டும் கொண்டுவரவேண்டுமென்பதில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்கும் இவ்வணியினர் ஜனாதிபதியுடன் கடுமையான வாக்குவாதப்பட்டிருக்கிறார்கள். இவ்விவகாரம் தொடர்பாக தன்னை சந்திக்க வந்த அணியினரை ஜனாதிபதி ரணில் கடுமையாக எச்சரித்ததன் காரணமாக ஏமற்றத்துடன் அவர்கள் திரும்பியுள்ளனர். 

பின்னர், குறித்த அணியினர் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்து உரையாடியுள்ளனர். அப்போது, மஹிந்த மீண்டும் பிரதமராக பதவி ஏற்பாராயின் அவருக்கு பதவியை விட்டுக்கொடுக்க தான் தயராக இருப்பதாக பிரதமர் தினேஷ் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷவின் குடும்பத்தினர் மீண்டும் எழுச்சி அடைவதற்கு, அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு பக்கத்திலும் கடுமையான பிரயத்தனங்களை செய்து வருகிறார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.  

நாவலப்பிட்டியில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் இரண்டாவது நிகழ்வில், “எந்த மக்களால் நாம் பதவி இறக்கப்பட்டமோ அதேமக்களின் ஆதரவைப்பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்” என்ற செய்தியை மஹிந்த மிகத்தெளிவாக கூறியுள்ளார். நாவலப்பிட்டியில் நடத்தப்பட்ட கூட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் பலமான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டபோதும் மஹிந்தவை கட்டுப்படுத்த முடிந்திருக்கவில்லை.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிர்க்கதி நிலையே மஹிந்த உள்ளிட்ட ராஜபக்ஷக்களுக்கு காணப்பட்டது. ஆனால் அப்போதைய ஜனாதிபதி மைத்தரிபால் சிறிசேன, தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்ட காலத்திலிருந்து அதனை சிதைக்கும் வகையிலையே ரணில் செயற்பட்டு வந்ததாக குற்றம் சாட்டி மூன்று வருடங்கள் நிறைவடைவதற்குள் மஹிந்தவை அழைத்து பிரதமராக்கினார். அதனைத்தொடர்ந்து அரசியலமைப்பு குழப்பங்கள் நிறைந்திருந்தன.

எவ்வாறாயினும், அந்தக்குழப்பங்கள் மஹிந்த உள்ளிட்ட ராஜபக்ஷக்களுக்கு சாதகமான நிலைமைகளை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறானதொரு சாதகமான சூழல் மீண்ம் ஏற்படுமென மஹிந்த இன்னமும் நம்புகின்றாரா என்பது தான் தற்போதைய விடயமாகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ கடந்த 50வருடங்களுக்கு மேலாக அரசியல்வாதியாக உள்ளதோடு, பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சராக எதிர்க்கட்சித்தலைவராக  பிரதமராக ஜனாதிபதியாக  செயற்பட்தொரு சாணக்கியத்தனமானவர். 

இவ்வாறிருக்கையில், பொதுஜன பெரமுனவில் உள்ள  மஹிந்த ஆதரவு அணி மேற்கொள்ளும் இம்முயற்சிகளுக்கு பஷில் ராஜபக்ஷ அணியினர் அதரவு வழங்காது அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் கசியும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அரசியல் அமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் தேசிய  அமைப்பாளராக செயலாற்றிவரும் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றுக்கு வரமுடியாத  நிலையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத்திருத்தம் கொண்டுவரப்பட்டதன் காரணமும் தனக்காகவேயென நம்பும் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியால் கொண்டுவரப்படவுள்ள வரவு,செலவுத்திட்டத்தை முறியடிக்கவேண்டுமென்ற சூழ்ச்;சியை பமேற்கொள்ளவிருப்பதாகவும் அறியக் கிடைக்கின்றது.

 கடந்த நல்லாட்சிக்காலத்தி நாட்டை விட்டுப்புறப்பட்டுப்போய் அமெரிக்காவில் தனது இரட்டை பிரஜாவுரிமையைக்காட்டி அடைக்கலம் கோரியிருந்த பஷில், மீண்டும் நாடு திரும்பி தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்று, 2019இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து  மிகதந்திரோபாயமன முறையில் பாராளுமன்றுக்குள் நுழைந்து தனது மூத்த சகோதரார் வசமிருந்த  நிதியமைச்சர் பதவியை இலாவகமாக கைப்பற்றிளதோடு 2021ஆம் ஆண்டின் வரவு,செலவுத்திட்டத்தினையும் சமர்ப்பித்திருந்தார்.

எனினும், அண்மையில் மக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக சகல பதவிகளையும் துறந்து மீண்டும் அமெரிக்காவுக்கு மீண்டும் சென்று தங்கியுள்ளார் பஷில் ராஜபக்ஷ.  

 இந்தநிலையில் தான், ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு, செலவுத்திட்டத்தை தோற்கடிக்க அவர் மேற்கொண்டு வரும் சூழ்ச்சிகள் அம்பலத்துக்கு வந்துள்ளன. 

இந்த முயற்சியின் மூலம்; வரவு,செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமாக இருந்தால் தற்போதைய அமைச்சரவையை கலைத்து புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டிய நிலையொன்று ஜனாதிபதிக்கு ஏற்படும். அந்த முயற்சியினூடாகவ அமைக்கப்படும் இடைக்கால அரசாங்கத்துக்குள் தம்மை சுதாகரித்துக்கொள்ளலாமென சில தரப்பினர் கருதுகின்றார்கள்.

பொதுஜன பெரமுனவின்  ஒருசில  உறுப்பினர்கள்;  வரவு, செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதன் மூலமே தற்போதைய பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று கருதுகின்றார்கள். ஆனால், வரவு, செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படவேண்டுமென்ற முயற்சிகளை மேற்கொள்ள நினைப்பவர்கள் அமைச்சுப்பொறுப்புக்கள் கிடைக்காமையின் ஆதங்கத்தில் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 இதேவேளை ஐக்கியமக்கள் சக்தியினர் ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்’ என்கின்றவகையில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு, செலவுத்திட்டமானது பொருளாதார மீட்சிக்கான திட்டங்களையும் மக்களுக்கான நிவாரணங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் இல்லையாயின் அந்தத் திட்டத்துக்கு நாம் ஆதரவு வழங்க மாட்டோம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள.

 புதிய வரவு, செலவுத்திட்டமானது  சாதாரண மக்களை வதைக்கும் வகையில் பல புதிய வரிகளை அறிமுகம் செய்யவிருக்கிற நிலையில் அதனை பாராளுமன்றில் நிறைவேற்ற அனுமதிக்கப் போவதில்லையென எதிர்க்கட்சியைச் சோந்தவர்களும் எதிரணியான பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் 

பொதுவாகப் பார்க்கப்போனால் நடப்பு வருடத்துக்கான வரவு, செலவுத்திட்டமானது மக்கள் பல்வேறு நெருக்கடிகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் சர்வதேச ரீதியான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சமயத்திலும் கொண்டுவரப்படுகிறது. 

இவ்வரவு, செலவுத்திட்டத்தினூடாக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் பல திட்டங்கள் இதில் உள்ளடக்கியிருப்பதாக சில தரப்பினரால் எடுத்துக்கூறபடுகிறது. அவ்வாறு இருப்பினும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சுமார் 13வருடங்கள் கழிந்த நிலையிலும் திட்டத்தின் செலவீனத்தில் பெருந்தொகை நிதி இன்னும்  பாதுகாப்புத்துறைக்கே ஒதுக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகிறது.

உதாரணமாக 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் மொத்த செலவீனமாக 3,65,726 கோடியே 56,38,000 ரூபா ஒதுக்கப்பட்டிருக்கும்  நிலையில் பாதுகாப்புத்துறைக்கான செலவீனமாக 53,920 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. 

அதேநேரம், மக்கள் ஆணையைப்பெறாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரால், பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறாத ஒருவரால், முதன்முதலாக சமர்ப்பிக்கப்படவுள்ள ஒரு வரவு,செலவுத் திட்டமாக 2023ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் காணப்படுகின்றது.

மேலும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார  நெருக்கடிகள் மற்றும் மக்களின் நம்பிக்கையீனங்கள் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஜனாதிபதி ஒருவரை பதவியிலிருந்து இறக்கி இன்னொருவருக்கு நினையாப்பிரகாரமாக ஜனாதிபதிக்கதிரையை வழங்கியுள்ளது. அவ்விதமான நிலைமைகளை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ‘சாணக்கியர்’ தான்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. எந்த மக்களால் புறக்கணிக்கப்பட்டாரோ அந்த மக்களை ஆளும் அதிகாரத்தை  தற்போது அவர் பெற்றுள்ளார். 

அவ்வாறானவர், தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை அதியுச்ச அளவில் பயன்படுத்த தவறமாட்டார் என்ற நம்பிக்கை துளிர்விட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தான் எதிரணியினர்  புதுப்புது வியூகங்களை வகுத்து அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து கீழிறக்கி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். 

இந்த முயற்சிகளை எவ்வாறு முறியடிப்பார் என்பது ஒருபுறமிருக்கையில், எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு, செலவுத்திட்டமானது  குறித்த எதிரணியினராலோ எதிர்க்கட்சியினராலோ தோற்கடிக்கப்படுமா அன்றி 22 திருத்தத்தை வென்றெடுத்ததுபோல் வெற்றி கொள்வாரா என்பது தற்போதைக்கு பெருங்கேள்வியாகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »