Our Feeds


Friday, November 4, 2022

News Editor

குரங்கம்மை நோய் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே விடுத்துள்ள அறிவுரை


 

நாட்டில் முதன் முறையாக குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து கடந்த முதலாம் திகதி நாட்டுக்கு வருகை தந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு குரங்கம்மை நோய்க்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

தோலில் பழுக்கள் மற்றும் சோர்வு உள்ளிட்ட நோய் அறிகுறிகள் ஏற்பட்டமையால் , சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த இளைஞன் தேசிய பாலியல் நோய் சிகிச்சை பிரிவிற்குச் சென்றுள்ளார். இதன் போது இளைஞனுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் , அவரது மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனைகளில் இளைஞன் குரங்கம்மை நோய்க்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் சிகிச்சைகளுக்காக தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு முதலாவது குரங்கம்மை நோயாளர் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் துரிதமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவிக்கையில்,

'குரங்கம்மை நோய்க்கு உள்ளாகியுள்ள ஒருவருடன் நேரடியாக ஸ்பரிச தொடர்பினை பேணுவதால் மாத்திரமே , இந்நோய் ஏனையோருக்கு பரவும். நோய்க்கு உள்ளானவரின் தோல் பகுதியில் ஏற்படும் பழுக்களிலிருந்து வெளியேறும் திரவம் நோய் பரவுவதற்கு ஏதுவாக அமையும் காரணியாகும். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு காய்ச்சலுடன் உடலில் பழுக்கள் போன்ற அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் துரிதமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்துகின்றோம்.

குறிப்பாக தமது இனப்பெருக்க உறுப்புக்களை அண்மித்த பகுதிகளில் இவ்வாறான பழுக்கள் ஏற்பட்டால் , விரைவில் சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும். இந்நோய்க்கு உள்ளாகுபவர்கள் நோயிலிருந்து முற்றாக குணமடையும் வரை பாலியல் உறவுகளை தவிர்ப்பது அவசியம். எவ்வாறிருப்பினும் இந்நோய் குணப்படுத்தக் கூடியதாகும். இந்நோய் தொடர்பில் நாடு என்ற ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து தொழிநுட்பரீதியில் தீர்மானங்களை எடுக்கப்படும் வரை அநாவசியமாக யாரும் கலவரமடையத் தேவையில்லை.' என்றார்.

குரங்கம்மை நோய் அறிகுறிகளாக ஆரம்பகட்டத்தில் காய்ச்சலும் , பின்னர் உடற் தோல் பகுதியில் படர் தடிப்புக்கள் என்பன ஏற்படும். இவை இலகுவில் இனங்காணப்படக் கூடிய அறிகுறிகளாகும். இரு பிரதான பிறழ்வுகள் மூலம் இந்த நோய் பரவுகின்றது. குறித்த பிறழ்வுகள் 10 சதவீதம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியவை. இவற்றை பி.சி.ஆர். பரிசோதனை ஊடாக இனங்காண முடியும். அதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏனைய ஆய்வு கூடங்களிலும் காணப்படுகின்றன.

கொவிட் வைரசுடன் ஒப்பிடும் போது , குரங்கு அம்மை வைரஸ் 50 ஆண்டுகள் பழமையானதாகும். எனினும் இது கொவிட் தொற்றை விட குறைவான வேகத்திலேயே பரவக்கூடியது. இதற்கான மருந்துகள் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சின்னம்மை நோய்க்காக பயன்படுத்தப்படும் தடுப்பூசியானது, குரங்கு அம்மை நோய்க்கு எதிராக 85 சதவீதம் சாதகமாக பலன் தரக்கூடியது. 

ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளமையின் காரணமாகவே, ஏனைய நாடுகளை பாதுகாப்பு முன்னாயத்தங்களை மேற்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசர சுகாதார நிலைமை கடந்த ஜூலை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »