Our Feeds


Friday, November 4, 2022

ShortTalk

மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளியின் குடும்பத்துக்கு 40 லட்சம் இழப்பீடு - இ.தொ.க வின் முயற்சிக்கு உடனடி பலன்.



(க.கிஷாந்தன்)


பதுளை - பசறை – கணவரல்ல தோட்டம் ஈ.ஜி.கே பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபாய் நஷ்டஈட்டு தொகை இன்றைய தினம் வழங்கப்பட்டது.


இதற்கான காசோலையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஸ்வரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட்டு கலந்துரையாடிய பின் காசோலையை வழங்கி வைத்தனர்.


தோட்டக் கம்பனி ஒன்றுக்குச் சொந்தமான கனவரல்ல தோட்டத்தில் வசித்து வந்த தமிழரசன் கணேஷ்மூர்த்தி என்ற 25 வயதுடைய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் 09ஆம் திகதி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தார்.


அத்துடன், மின்சாரம் தாக்கியே அவரது மரணம் ஏற்பட்டுள்ளதாக, பதுளை சட்ட வைத்திய அதிகாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இவர் சாதாரண தொழிலாளி எனவும் மின்சார பராமரிப்புப் பணியை செய்ய வற்புறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


பின்னர், குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதோடு பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தாருக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தொழில் அமைச்சரிடம் முன் வைத்தனர்.


அதற்கு பதில் அளித்த தொழில் அமைச்சர் மனுஷன நாணயக்கார கூடிய விரைவில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.


அதற்கமைய நேற்று (03.11.2022) உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின்  குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »