Our Feeds


Thursday, November 10, 2022

ShortTalk

அலுத்தங்கள் மூலம் முஸ்லிம் தனியார் சட்டத்தை கொண்டுவர முடியாது - முஸ்லிம் MP க்களுடன் பேசுங்கள் - ரிஷாத் பதியுத்தீன்



முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டமூலம் தொடர்பில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு அவசரமாக ஏற்பாடு செய்யுமாறும் அதன்மூலம், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கி, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார்.


பாராளுமன்றத்தில் இன்று (10) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது.

“நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, புதிதாகக் கொண்டுவந்துள்ள 11 சட்டமூலங்களும் நாட்டுக்குத் தேவையானவை. ஆனால், இவற்றை நடைமுறைப்படுத்துகின்ற விடயங்களிலே, அரசியலுக்கு அப்பால் செயற்படுத்துவன் மூலமே இதனுடைய பலாபலன்களை மக்கள் ஏற்றுக்கொள்வர். அந்தவகையில், இந்த சட்டமூலங்கள் அரசியலுக்கு அப்பால் செயற்படுத்தப்பட வேண்டுமென வேண்டுகின்றேன்.

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டமூலம் தொடர்பில் முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி ஒரு குழுவை நியமித்தார். எனினும், சில அழுத்தங்கள் காரணமாக, இஸ்லாமிய விழுமியங்களுக்கு அப்பால் சில முடிவுகள் எடுக்கப்பட்டு, தற்போதைய நீதி அமைச்சராகிய உங்களிடம் அது வழங்கப்பட்டதாக நாம் அறிகின்றோம்.


எனவே, இந்த விடயம் சம்பந்தமாக, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பை நீதி அமைச்சிலோ, பாராளுமன்றத்திலோ விரைவில் ஏற்பாடு செய்து தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். இது குறித்து எமது கருத்துக்களை எடுத்துரைப்பதற்கும், தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவதற்கும் அது வழிகோலுமென நம்புகின்றேன். எனவே, இவற்றை சரியான முறையில் செய்ய வேண்டுமேயொழிய, அழுத்தங்கள் மூலம் இவற்றைக் கொண்டுவர முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

இதன்போது, பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ,

“இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டேன். மேலும், குழுவின் பரிந்துரைக்கு அமைய அந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வார காலத்திற்குள் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபபட தயாராக இருக்கின்றேன்” என்றார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ரிஷாட் எம்.பி,

“அதேபோன்று, பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில், போராட்டங்களும் எதிர்ப்புக்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழ் இளைஞர்கள் பல வருடங்களாக சிறையில் வாடுகின்றனர். அதேபோன்று, முஸ்லிம் இளைஞர்கள், கல்விமான்கள் இந்த சட்டத்தின் காரணமாக அநியாயமாக, மூன்று வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. எனவே, இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு வேண்டுகின்றேன்.

அத்துடன், தற்போது பேசுபொருளாக இருக்கும் மற்றுமொரு விடயம் என்னவெனில், சட்டக் கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் பரீட்சை எழுதுமாறு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்த விடயம் தொடர்பில், காலவரை ஒன்றை வழங்கி, .பிரதம நீதியரசருடனும் இது குறித்து பேசி நடவடிக்கை ஒன்றை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

நாட்டில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது, இளைஞர்கள் மாத்திரமின்றி, மாணவர்களும் இதற்கு அடிமையாகி வருகின்றனர். எனவே, இதனை சீர்செய்யும் வகையில், கல்வி அமைச்சுடன் இணைந்து சட்டங்களை நடைமுறைப்படுத்தி இதற்கு முடிவுகட்ட வேண்டும். மாணவர்கள் இதற்கு அடிமைபடுவதை தவிர்க்கும் வகையில், விஷேட வேலைத்திட்டமொன்றை கொண்டுவாருங்கள்.


அதேபோன்று, 20வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் நாம் அனுபவித்த கஷ்டங்கள் போதும். எனவே, 21வது திருத்தத்தின் மூலம் எமக்கு ஒரு நம்பகத்தன்மை ஏற்பட்டுள்ளது.


இதேவேளை இன்னுமொரு முக்கியமான விடயத்தை இந்த உயர் சபையிலே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நான் கடந்த வாரம் புத்தளம் சென்றிருந்த போது, தெங்கு மூலப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற கஷ்டங்கள் தொடர்பில் என்னிடம் தெரிவித்தனர். 15 வருடங்களுக்கு முன்னர் வாங்கிய உற்பத்திப் பொருட்களை, தற்பொழுதும் அதே விலைக்கே கொள்வனவு செய்கின்றனர். அப்போது 18 ரூபாய்க்கு வாங்கிய தெங்கு மட்டையை, இப்போதும் அதே விலைக்கே வாங்குகின்றனர். இந்த விடயம் தொடர்பில் கைத்தொழில் அமைச்சர் விசேட கவனம் செலுத்தி, உலக சந்தையின் விலைக்கேற்ப தும்பு உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கான நியாயமான விலையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »