Our Feeds


Thursday, December 29, 2022

ShortTalk

தேர்தலை ஒரு வருடம் பிற்போட அரசாங்கம் அவதானம்!



(லியோ நிரோஷ தர்ஷன்)


தேர்தலுக்காக பெரும் தொகை நிதி செலவிடும் போது, அது அரச வருமானத்தை நேரடியாக பாதித்து விடும். இதனால் மீண்டும் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி ஏற்பட்டால் கட்டியெழுப்புவது என்பது கடினமாகிவிடும்.

அதே போன்று எதிர்வரும்  மார்ச் மாதம் அளவில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புகளும் இலங்கைக்கு கிடைக்க இருப்பதால் நாட்டின் பொருளாதாரம் சுமூகமான நிலைக்கு திரும்பும். இதன் பின்னர் நாட்டிற்கு பாதிப்பின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தலாம் என அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 

இது குறித்து நேற்று (28) புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் நிதியமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிடுகையில்,

உள்ளுராட்சி மன்ற தேர்தலை மீண்டும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பது சிறந்ததாக கலந்துரையாடலின் போது கருதப்பட்டது. வரலாறு காணாத படுமோசமான பொருளாதார நெருக்கடியினை நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ளது. அரச வருமானமானது, அரச ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சமுர்தி கொடுப்பணவுகளுக்கே போதுமானதாக உள்ளது. எனவே இவ்வாறானதொரு நெருக்கடியான நிலமையில் தேர்தலொன்றுக்கு செல்வதானது நாட்டை மேலும் பாதாளத்தில் தள்ளிவிடும். 

நாட்டில்  தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் மார்ச் மாதம் அளவில் இதன் பலன்களை பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறானதொரு நிலைமையில் தேர்தல் ஒன்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது ஏற்புடையதல்ல என்பதுடன், அவ்வாறு நிதி ஒதுக்கும் பட்சத்தில் கடந்த 6 மாத காலமாக நாட்டின் நிதி நெருக்கடியை தீர்க்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் திட்டங்கள் கூட பயனற்றதாகி விடும். இதனால் நாட்டில் பொருளாதாரத்திற்கே பாதிப்பும் ஏற்படும்.

குறிப்பாக அரச ஊழியர்களின் ஊதியத்திற்காக 93,000 மில்லியன் ரூபாவும், ஓய்வூதியத்திற்காக 26,500 மில்லியன் ரூபாவும், சமுர்தி கொடுப்பணவுகளுக்காக 6000 மில்லியனும் ஒதுக்கப்படுகின்றன. தேசிய வருமானமானது இந்த செலவீணங்களுக்கே போதுமானதாக உள்ளது. 

இதனை தவிர சமூக நலன்புரி மேம்பாட்டு திட்டங்களுக்காக 3500 மில்லியன், மருந்துகள் மற்றும் சுகாதார சேவைக்காக 3000 மில்லியன், இராணுவத்தினரின் உணவிற்காக 2000 மில்லியன்,  உரம் 2000 மில்லியன்,  எரிபொருள், மின்சாரம், நீர் மற்றும் காப்புறுதி என்பவற்றுக்காக 7000 மில்லியன் உட்பட ஏனைய செலவீனங்களுக்காக 3000 மில்லியன் என அரச செலவீனங்கள்  வருமான எல்லையை பன்மடங்கில் தாண்டியுள்ளது. 

இவை போதாதென்று  கடன் தவணைகளும் உள்ளன. மேலும் வங்கிகள் அரசுக்கு அளித்து வந்த கடன் நிலுவை தொகை குறைக்கப்பட்டுள்ளதால் மத்திய வங்கியிடமிருந்து செலவீனங்களுக்கான பணத்தை பெற்றுக்கொள்வது தவிர வேறு வழியுமில்லை. தேர்தலை நடத்துவதென்றாலும்  மத்திய வங்கியிடமிருந்தே பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். 

தேவையான பயணத்தை வழங்க மத்திய வங்கி நாணய தாழ்களை அச்சிட்டால் நாட்டில் மீண்டும் பணவீக்கம்  அதிகரித்து பொருளாதாரம் பாதிக்கப்படும். இதனால் மக்களின் வாழ்வாதார சுமைகளும் மேலோங்கும்.

இவை குறித்து சிந்தித்து செயற்பட வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். ஒரு வருட காலத்திற்கேனும் தேர்தலை பிற்போட வேண்டும். நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு கட்டுபாட்டிற்குள் வந்துள்ளது. விவசாயத்திற்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பினால் நெல் உற்பத்தி தற்போது மோலோங்கி வருகிறது. இதன் பலனையும் அடுத்த வருடம் முதலாம் காலாண்டில் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே தேர்தலுக்காக பெரும் தொகை செலவிடும் போது அரச வருமானத்தை நேரடியாக பாதிக்கும். மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டால் கட்டியெழுப்புவது என்பது கடினமாகி விடும். அதே போன்று அடுத்த வருடம் மார்ச் மாதம் அளவில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புகளும் இலங்கைக்கு கிடைக்கும். மேலும் புதிய வரி கொள்கை ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும். இதன் போது நாட்டின் பொருளாதாரத்திற்கு தாக்கம் ஏற்படாதவாறு தேர்தலை நடத்த முடியும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »