Our Feeds


Tuesday, December 27, 2022

ShortTalk

மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மக்கள் இருளில் வாழ நேரிடும் - அமைச்சர் காஞ்சன




(இராஜதுரை ஹஷான்)

இலங்கை மின்சார சபையின் கடந்த கால நட்டத்தை ஈடு செய்வதற்காக மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் விடயம் அடிப்படையற்றதாகும்.

2023 ஆம் ஆண்டு தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்பதற்காகவே மின்கட்டணத்தை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மக்கள் பல மணித்தியாலங்கள் இருளில் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மின்கட்டணம் நிச்சயம் அதிகரிக்கப்படும்.சட்ட ஆலோசனைக்கு அமையவே மின்கட்டணம் திருத்தம் செய்யப்படும்.

இந்த தீர்மானத்தை எவரேனும் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினால் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை மின்சார சபையின் கடந்த கால நட்டத்தை ஈடு செய்வதற்காக மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் அடிப்படையற்றதாகும்.மின்சார சபையில் கடந்த மற்றும் நடப்பு நட்டத்தை ஈடு செய்ய வேண்டுமாயின் மின்கட்டணத்தை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும்,ஆகவே அது சாத்தியமற்றது.

2023 ஆம் ஆண்டுக்கான மின்கட்டமைப்பில் மின் உற்பத்தி, மின்விநியோகம் மற்றும் மின்சாரத்துறையின் இதர சேவைகள் ஆகியவற்றின் செலவுகளை ஈடு செய்வதற்கு மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பரிந்துரைக்கு அமைய கடந்த ஆகஸ்ட் மாதம் மின்கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தால் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

மின்கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானம் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதல்ல,மின்சார சபையின் எதிர்கால திட்டமிடலுக்கு அமையவே மின்கட்டணத்தை மீண்டும் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம் திருத்தம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

2023 ஆம் ஆண்டு மின்கட்டமைப்பு சீராக இடம் பெற வேண்டும் என்பதற்காகவே மின்கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நீர்மின் உற்பத்தி ஊடபக 27 சதவீத மின்சாரத்தையும், நிலக்கரி ஊடாக 28 சதவீத மின்சாரத்தையும், காற்றாலை ஊடாக 13 சதவீத மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், தனியார் தரப்பினரிடமிருந்து 12 சதவீத மின் கொள்வனவையும், புதுப்பிக்கத்தக்க சக்தி வளம் ஊடாக 13 சதவீத மின்சாரத்தையும் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்னுற்பத்திக்கான செலவை முகாமைத்துவம் செய்யும் வகையில் தற்போதைய மின்கட்டண திருத்தம் அமையவில்லை. மின்னுற்பத்திக்கான செலவு மற்றும் மின் கட்டண வருமானத்திற்கும் இடையில் சுமார் 278 பில்லியன் ரூபா பற்றாக்குறை காணப்படுகிறது. 

ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கப்பட்ட மின்கட்டண திருத்த்திற்கு அமைய ஒரு மின் அலகுக்கு 29.14 ரூபா அறவிடப்படுகிறது.அடுத்த ஆண்டுக்கான மின் உற்பத்தியின் போது ஒரு மின் அலகுக்கு 48 அல்லது 49 ரூபா செலவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே ஒரு மின்னலகிற்கான குறைந்தபட்ச கட்டணத்தை 48 ரூபாவாக நிர்ணயிக்க நேரிடும்.

மின்கட்டண அதிகரிப்புக்கு ஒரு தரப்பினர் எதிர்;ப்பு தெரிவிக்கிறார்கள்.நீர்மின் உற்பத்திக்கு தேவையான மழை வீழ்ச்சி சிறந்த முறையில் கிடைக்கும் வரை எரிபொருள் ஊடாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். அடுத்த  ஆண்டு முதல் மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய நிதி வழங்க முடியாது என திறைச்சேரி குறிப்பிட்டுள்ளது.மின்கட்டமைப்பை சீராக முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது வரி வீதத்தை அதிகரிக்க வேண்டும்.

மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமாயின் மக்கள் பல மணித்தியாலங்கள் இருளில் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை நீர்மின் உற்பத்திக்கு தேவையான மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்றால் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின்கட்டணத்தை குறைக்க முடியும்.

நாட்டில் 30 மின் அலகிற்கும் குறைவான மின்சாரத்தை பாவிக்கும் 14 இலட்சம் மின்பாவனையாளர்களும்,60 அலகிற்கு குறைவான மின்சாரத்தை பாவிக்கும் 16 இலட்சம் மின்பாவனையாளர்களும் உள்ளார்கள்.அத்துடன் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நேரடி நிதி வழங்கல் ஊடாக மின்கட்டணத்தில் நிவாரணம் வழங்க நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்ட ஆலோசனைகளுக்கு அமைய மின்கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மின்கட்டணம் நிச்சயம் அதிகரிக்கப்பட்டு ஜனவரி மாத மின்கட்டண பட்டியலில் புதிய கட்டண திருத்தம் உள்வாங்கப்படும்.மின்கட்டண திருத்தத்திற்கு எதிராக எவரேனும் நீதிமன்றத்தை நாடினால் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »