Our Feeds


Saturday, December 24, 2022

ShortTalk

இலங்கையின் வனப் பாதுகாப்பு - தொல்பொருள் ஆராய்ச்சி துறைகளை பயங்கரவாத அமைப்புகளாக பெயரிடுமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை!



இலங்கையில் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் வனப் பாதுகாப்புத்துறைகளை பயங்கரவாத அமைப்புகளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் பைடனுக்கான தமிழர் என்ற அமைப்பு, கோரியுள்ளது.


இது தொடர்பில் அந்த அமைப்பு, அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கனுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

வனப்பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் தமிழ் பிரதேசங்களில் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் மேற்பார்வையில் நில அபகரிப்பு மற்றும் இனச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்தநிலையில் இலங்கையில் தமிழர்கள் உயிர்வாழ்வதை உறுதி செய்வதற்கும் அமைதியைப் பாதுகாப்பதற்கும், தமிழர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட இறையாண்மையுள்ள அரசு ஒன்று தேவையாகும் என்று அந்த கடிதத்தில் பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க, வனத்துறையின் பணிப்பாளர் கே.எம்.ஏ. பண்டார ஆகியோரை பயங்கரவாதிகளாக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

வடகிழக்கில் உள்ள தமிழர்கள், தீவின் தெற்கில் இருந்து சிங்களக் குடியேற்றங்களால் தமது மூதாதையர்களின் விளைநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான இந்து கோவில்கள் அகற்றப்பட்டுள்ளன.

அந்த இடங்களில் புத்த கோவில்கள் எழுப்பப்படுகின்றன. இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட முயற்சிகளால் தமிழ் மக்களையும் அவர்களின் கலாசாரத்தையும் தீவில் இருந்து அழிக்கும் முயற்சிகளால் தமிழர்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை நாளுக்கு நாள் இழக்கிறார்கள் என்று பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு, ராஜாங்க செயலாளர் பிளிங்கனுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

1961 ஆம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்ட மகாவலி திட்டம் காரணமாக தமிழர்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்பதில் தாம் நம்பிக்கைக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பைடனுக்கான தமிழர் அமைப்பு, தமிழர் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு அமெரிக்காவின் உதவியை கோரியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »