Our Feeds


Thursday, December 29, 2022

ShortTalk

நான் இனவாதியல்ல என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள் - தம்புள்ள புதிய ஜும்ஆ பள்ளி திறப்பு நிகழ்வில் இனாமழுவே சுமங்கல தேரர்




(பீ.எம்.அன்வர் - கலேவெல நிருபர்)


"நானொரு இனவாதியென்றோ அல்லது ஒரு மதவாதி என்றோ நீங்கள் என்னை பற்றி அளவீடு செய்து கொண்டிருக்கலாம் ஆனால் நான் அத்தகையவனல்லன் என்பதை இன்று நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்"

தம்புள்ள நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஜும்ஆ பள்ளியின் தற்காலிகப் பிரிவைத் திறந்து வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே விகாராதிபதி இனாமழுவே சுமங்கல தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

23ஆம் திகதி வெள்ளிக்கிழமை புதிய தற்காலிக பள்ளிவாசலைத் திறந்து முதலாவது ஜும்ஆத் தொழுகையை நடத்துவதென தம்புள்ள ஹைரியா ஜும்ஆப் பள்ளி நிர்வாகம் தீர்மானித்திருந்ததைத் தொடர்ந்து, பள்ளியின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலும், தம்புள்ள விகாரதிபதியை பிரதம அதிதியாக அழைத்து திறப்பு விழா நடாத்தப்பட்டது.

விகாரதிபதி இங்கு தொடர்ந்து கூறுகையில் 1978 ஆம் ஆண்டு தம்புள்ள புனித பூமி அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் முஸ்லிம் பள்ளிவாசல் சட்டவிரோதமான இடத்தில் அமைக்கப்பட்டிருப்பதால் அத்திட்டம் தடைப்பட்டு வந்தது என்றார்.

இப்போது உங்கள் வணக்க வழிபாடுகளுக்கென சட்டபூர்வமான காணி கிடைத்துள்ளது தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இனி உங்கள் விருப்பப் பிரகாரம் இவ் வழிபாட்டுத் தளத்தின் வேலை திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும். 

இப்பள்ளிவாசல் நிர்மாணம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் பிரச்சனைகள் இருப்பின் அவற்றில் தலையிட்டு தேவையான உதவிகளை செய்வதற்கு காத்திருக்கிறேன். சங்க சபாவின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றுதான் இத்தகைய அதிக எண்ணிக்கையிலான மக்கள் இவ்வாறு வணக்க வழிபாடுகளுக்கு வந்திருப்பதை காண்கிறேன். இத்தகைய பெரும் எண்ணிக்கையானோர் முன்னைய சிறு தகரக்கொட்டில் பள்ளிவாசலில் தமது வணக்க வழிபாடுகளை எவ்வாறுதான் மேற்கொண்டர்களோ என நான் மிகவும் வியப்படைகிறேன் எனவும் தெரிவித்தார்.

தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் கியாஸ் ஹாஜியார் இங்கு குறிப்பிடுகையில், வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளின் பொருட்டு விகாராதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ஒருவார காலத்தினுள் சுமார் எண்பது (80) வருட பழைமை வாய்ந்த பள்ளிவாசலை அகற்றி புதிய காணியில் அத்திவாரம் அமைத்து இரவு பகலாக நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் வாலிபர்கள் ஆகியோரின் முயற்சியினால் தற்காலிகமாகப் பள்ளிவாசலை அமைத்துக் கொண்டோம் .

இதன் மூலம் விகாரதிபதிக்கு நாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினோம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் தொடர்வோம் என்ன தெரிவித்தார்.

விகாரதிபதிக்கும் நிர்வாக சார்பில் நன்றி தெரிவித்தார்.

பள்ளியின் பேஷ் இமாம் ஜவுபர் மௌலவியின் தலைமையில் கொத்பா பிரசங்கம் நடத்தப்பட்டு ஜும்மா தொழுகை நடாத்தப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »