Our Feeds


Saturday, December 24, 2022

News Editor

டுவிட்டரில் தற்கொலை தடுப்புக்கான சிறப்பு ஹேஷ்டேக் சேவை நீக்கம்


 

டுவிட்டரில் இருந்து தற்கொலை தடுப்புக்கான சிறப்பு ஹேஷ்டேக் சேவையை நீக்கியது இலட்சக்கணக்கானோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அம்சம் கொண்ட சேவை ஒன்றை டுவிட்டரானது நீக்கியுள்ளது. புதிய உரிமையாளரான மஸ்க்கின் உத்தரவின் பேரிலேயே இது செயல்படுத்தப்பட்டு உள்ளது என டுவிட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதன்படி #ThereIsHelp என்ற சேவை நீக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மனநலம், எச்.ஐ.வி., தடுப்பூசிகள், குழந்தை பாலியல் சுரண்டல், கொரோனா பெருந்தொற்று, பாலின அடிப்படையிலான வன்முறை, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுடன் தொடர்புடைய சேவை அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர்களை தொடர்பு கொள்வதற்கான குறிப்பிட்ட தேடுதல்களை மேற்கொள்ள இந்த ஹேஷ்டேக் பயனளித்து வந்தது. 

இந்த சேவை கடந்த 2 நாட்களாக டுவிட்டரில் இல்லாதது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் விசயத்தில் நம்பர் ஒன் முக்கியத்துவம் என கூறி விட்டு, இந்த நடவடிக்கையை மஸ்க் எடுத்துள்ளார்.

டுவிட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்ரவதை, தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. 

வெறுப்பு, துன்புறுத்தல் மற்றும் பிற தீங்குகளை டுவிட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவம் மற்றும் வழிகாட்டுதலை இக்குழு வழங்கி வந்தது. இந்த நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். 

இந்நிலையில், ஆபத்தில் உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு பயனளிக்க கூடிய டுவிட்டரின் சிறப்பு ஹேஷ்டேக் சேவையை தற்போது எலான் மஸ்க் உத்தரவின்பேரில் அந்நிறுவனம் நீக்கியுள்ளது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு உள்ளது. ஒருவேளை அந்த சிறப்பு சேவையை திறம்பட அமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என கருதினாலும் அதற்கான தகவலும் வெளியிடப்படாமல் உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »