Our Feeds


Saturday, December 24, 2022

ShortTalk

தொழிலதிபர் தினேஸ் ஷாப்டர் கொலை: மனைவி - சகோதரரிடம் வாக்குமூலம் பதிவு - அடுத்தது என்ன?



வர்த்தகர் தினேஸ் ஷாப்டரின் கொலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக இன்றைய தினம் அவரது மனைவி மற்றும் சகோதரர் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.


கொழும்பு – 07 பகுதியிலுள்ள அவரது இல்லத்திற்கு சென்று தினேஸ் ஷாப்டரின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

எனினும் தினேஸ் ஷாப்ரின் சகோதரரிடம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

இதேவேளை, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றும் தினேஸ் ஷாப்டரின் இல்லத்திற்கு சென்றிருந்தது.

கடந்த 15ஆம் திகதி தினேஷ் ஷாப்டர், கைகள் கட்டப்பட்ட நிலையில், அவரது மகிழுந்தில் இருந்து மீட்கப்பட்டார்.

இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிற்பகல் 2 மணியளவில் தமது வீட்டிலிருந்து சென்ற தினேஸ் ஷாப்டர், தாம் 30 நிமிடங்களில் மீள வீடு திரும்புவதாக தமது மனைவியிடம் அறிவித்து விட்டு சென்றிருந்தார்.

எனினும், அவர் நீண்ட நேரமாக மீள வீடு திரும்பாமையால் அவருக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியதாகவும் அதற்கு பதில் கிடைக்காமையால் அவரது தொலைபேசி தரவுகளின் ஊடாக அந்த இடத்தை தாம் கண்டறிந்ததாக தினேஸ் ஷாப்டரின் மனைவி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பொரளை பொது மயானத்தில் தமது கணவர் உள்ளதாக தினேஸ் ஷாப்டரின் பிரதான நிறைவேற்று அதிகாரியான கிறிஸ் பெரேராவிடம் அவர் தெரிவித்துள்ளதோடு அவர் தொடர்பில் அவதானிக்குமாறு கோரியுள்ளார்.

கிறிஸ் பெரேரா என்ற நபர் தினேஸ் ஷாப்டரின் சகல வர்த்தக நடவடிக்கைகளும் அறிந்த சுமார் 10 வருடங்கள் அவருடன் தொடர்பை பேணியவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், தினேஸ் ஷாப்டரின் மனைவி தமக்கு தகவல் வழங்கிய சந்தர்ப்பத்தில் தாம், தமது இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையில் இருந்து அழைத்து சென்றதாக கிறிஸ் பெரேரா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் தமது பிள்ளைகளை பாதுகாப்பாக, மற்றுமொரு மகிழுந்தில் சாரதியுடன் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துவிட்டு தாம் பொரளை பொது மயானத்துக்கு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், பொரளை மயானத்திற்கு சென்று பார்த்தபோது, தினேஸ் ஷாப்டர், அவரது மகிழுந்தின் இருக்கையில் இருந்தபடியே பிணைக்கப்பட்டு, கழுத்தில் இறப்பர் பட்டி ஒன்று சுற்றப்பட்டிருந்த நிலையில் இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிறைவேற்று அதிகாரி, உடனடியாகச் செயற்பட்டு, மயானத்தில் இருந்த தொழிலாளி ஒருவரின் உதவியுடன் பிணைப்பில் இருந்து தினேஸ் சாப்டரை விடுவித்தார்.

பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவீர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரழந்தாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »