Our Feeds


Tuesday, December 27, 2022

ShortTalk

என்னை விமர்சித்தவர்கள் இன்று ரனிலுடன் இணைந்து அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள் - மைத்திரி கடும் தாக்கு!




(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த போது என் மீது கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு என்னை விமர்சித்தவர்களே இன்று ஐ.தே.க. தலைவருடன் இணைந்து அனைத்தையும் இழந்து நிற்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் திங்கட்கிழமை (டிச. 26) நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்கள் எதிர்நோக்கியுள்ள துயரம் தொடர்பில் அரசாங்கமும் அறிந்திருக்கிறது. எனவே விரைவில் மக்களுக்கான ஏதேனுமொரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சுதந்திரத்தின் பின்னர் 1977 வரை நாடு இவ்வாறானதொரு நிலைமைக்கு தள்ளப்படும் என்று நான் ஒருபோதும் எண்ணவில்லை.

இதில் தாக்கம் செலுத்தும் 3 பிரதான காரணிகளில் முதலாவது 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பாகும். பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்களில் அரசியல்வாதிகள் தன்னிச்சையாக செயற்படுவதற்கு இதுவே வழியமைத்தது.

தற்போது அமைச்சரவை நியமனமும் இதில் தாக்கம் செலுத்துகிறது. எனவே விஞ்ஞானபூர்வமாக அமைச்சரவை நியமிக்கப்பட்டால் அது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவ்வாறான சூழல் மாற்றமடைய வேண்டுமெனில் தற்போதுள்ள முறைமையில் மாற்றம் அவசியமாகும். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் உண்மையானவையாகும். எனினும் இறுதியில் அவர்களின் நற்பெயரை சீரழித்துக் கொண்டனர்.

தலைவரொருவர் இன்றி 3 நாட்கள் நாடு காணப்பட்டது. அந்த 3 நாட்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை தலைவராக தெரிவு செய்திருக்க வேண்டும். எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே அதனை தவறாக வழிநடத்திவிட்டனர்.

நான் ஜனாதிபதியானதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட போது, கட்சியை காட்டிக் கொடுத்துவிட்டதாக தற்போது பொதுஜன பெரமுனவிலுள்ளோர் என்னை விமர்சித்தனர்

எவ்வாறிருப்பினும் நான் அன்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன். ஆனால் பொதுஜன பெரமுன ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளையும் இழந்து நிற்கிறது.

அன்று பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் மிகக் குறுகிய காலத்திற்குள் இவ்வாறானதொரு கட்சி ஸ்தாபிக்கப்பட்டு, இத்தகைய வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அதன் தலைவர் பெருமை பேசிக் கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் எதுவும் இல்லாமல் போயுள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »