Our Feeds


Tuesday, January 24, 2023

News Editor

சீனாவில் 5 நாட்களில் 13 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு


 சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த 13 மற்றும் 19 ஆகிய திகதிகளுக்கு இடையில் 5 நாட்களில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த இறப்பு குறித்து சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், பிரிட்டனை சேர்ந்த சுகாதார பகுப்பாய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.


கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் இந்த பாதிப்பு தீவிரமாக பரவியது. தற்போது வரை ஏறத்தாழ 70 கோடி பேரை இது பாதித்திருக்கிறது. அதேபோல 67  இலட்சத்திற்கும் அதிகமானோரை பலி வாங்கியுள்ளது. இந்த பாதிப்புக்கு சீனாதான் காரணம் என்றும், சீனா திட்டமிட்டு இந்த வைரஸை பரப்பியது எனவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின.


இதனையடுத்து சீனா விழித்துக்கொண்டது. உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்வோம் என்று கூற தொடங்கிய நிலையில், சீனா மட்டும் 'ஜீரோ கோவிட் தொற்று' என கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியது. இந்தியாவிலும், அமெரிக்காவிலும், பிரேசிலிலும் கொரோனா உயிரிழப்புகள் இலட்சக்கணக்கில் பதிவான நிலையில் சீனாவில் இந்த எண்ணிக்கை சில நூறுகளில் மட்டுமே பதிவானது. காரணம் இந்த கடுமையான கட்டுப்பாடுகள்தான்.



 

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 60,000 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என சொல்லப்பட்டு வந்தது.


இந்நிலையில் கடந்த 13 மற்றும் 19 ஆகிய திகதிகளுக்கு இடையில் 5 நாட்களில் மட்டும் 681 பேர் கொரோனா தொற்றாலும், 11,977 பேர் இதர நோய்களாலும் உயிரிழந்துள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை மீது சந்தேகம் எழுப்பியுள்ள பிரிட்டனை சேர்ந்த சுகாதார பகுப்பாய்வு நிறுவனமான 'ஏர்ஃபினிட்டி', இந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளது.


 

மேலும் நேற்று 'சந்திர புத்தாண்டு' சீனாவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், நாடு முழுவதும் சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்பதால் எனவே இனி வரும் நாட்களில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று ஏர்ஃபினிட்டி எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »